நாம் சார்ந்திருக்கும் பணியில் இருக்கும் ஒருவர், அவர் நமக்கு அதிக அறிமுகமில்லாமல் இருந்தால் கூட அவர் இயற்கையாக மரணமடைந்தாலோ நமக்கும் துக்கம் கொஞ்சமாவது தொண்டையை அடைக்கும். அவருக்காக அனுதாபப்படுவோம். ஆனால், சினிமாத் துறையிலோ சக தயாரிப்பாளர் ஒருவரின் தற்கொலைக்கு வருத்தப்படவில்லை என்றால் கூடப் பரவாயில்லை. குற்றம் சாட்டப்பட்டவரின் இமேஜைக் காப்பாற்ற சிலர் பகீரப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு தமிழ்த் திரையுலகத்தின் மிகப் பெரிய தயாரிப்பாளர் ஜி.வி.யின் தற்கொலை. அவர் தம்பி இந்தியாவிலேயே பிரபலமான இயக்குனர் மணிரத்னம். அவர்களது அப்பாவும் திரைத்துறையில் இருந்தவர்தான். அப்படி பாரம்பரியமான சினிமா குடும்பத்தில் வந்த தயாரிப்பாளர் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது அன்றே அனைவருக்கும் தெரியும்.
சில நாட்களுக்கு முன்பு கந்து வட்டி கடன் கொடுமையால் மீண்டும் ஒரு தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்டார். அவரது அகால மரணத்திலிருந்து அவரது குடும்பத்தினர் இன்னும் மீண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அதற்குள் அவரது தற்கொலைக்குக் காரணமானவர் என்று வழக்குப் பதிவு செய்து தேடப்படும் அன்பு செழியனை நல்லவர், நேர்மையானவர், உத்தமர் என காட்டிக் கொள்ள நேற்று அவருக்கு ஆதரவாக ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. நேற்று மாலை அவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் வேறு அளித்திருக்கிறார்கள். இது குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றுவதற்கான கூட்டமாக இருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிரான கோஷ்டியினர் நடத்தும் ஒரு கூட்டமாகத்தான் தெரிந்தது.
தற்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கந்துவட்டி கொடுமையை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் என அறிவித்த சில தினங்களுக்குள் இந்தக் கூட்டம் நடந்துள்ளது. ஒரு தயாரிப்பாளரின் தற்கொலையில் கூட தமிழ்த் திரையுலகத்தில் உள்ள மற்ற தயாரிப்பாளர்களிடம் ஒற்றுமை இல்லை என்பதை மற்ற திரையுலகத் தயாரிப்பாளர்கள் கிண்டலுடன் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள்.
தொடர்ந்து பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் திரையுலகம் இப்போது புதிதாக ஒரு பிரச்சனையை சந்திக்க ஆரம்பித்துள்ளது. இது எங்கு போய் முடியப் போகிறது என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.