“அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைய வெளிநாட்டுத் தொடர்களில் விளையாடப் போகிறோம். அங்குள்ள ஆடுகளங்கள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அங்கு சிறப்பாக ஆடுவதற்கு இதுபோன்ற ஆடுகளங்கள் உதவியாக இருக்கும். இங்கு ரன் குவிக்கும்போது அது பேட்ஸ்மேனின் நம்பிக்கையை அதிகரிக்கும்” – கொல்கத்தா போட்டி முடிந்ததும் கே.எல். ராகுல் அளித்த பேட்டி இது. இந்திய ஆடுகளங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அந்த பிட்ச்சின் ஸ்விங் தன்மைக்கு இந்தியர்களும் தடுமாறத்தான் செய்தனர். அப்படிப்பட்ட ஆடுகளங்களில் ஆடுவதுதான் தென்னாப்பிரிக்கத் தொடருக்கு உதவும் என்றனர் வல்லுநர்கள். இரண்டாவது போட்டி…மீண்டும் அதே டெம்ப்ளேட் இந்திய பிட்ச். அஷ்வினும், ஜடேஜாவுமே வழக்கம்போல் விக்கெட் வேட்டை நடத்த, சுருண்டுவிட்டது இலங்கை. எந்த வகையில் இந்தப் போட்டி அடுத்த 2 ஆண்டு வெளிநாட்டுப் பயணங்களுக்கு உதவப் போகிறது? பலவீனமான இலங்கையைக் கூட்டிவந்து, அதே ‘ஸ்பின்-ஃப்ரண்ட்லி’ பிட்ச்களில் ஆடி, என்னதான் சாதிக்க நினைக்கிறது இந்திய அணி? #INDvSL
பிப்ரவரி 23, 2017 – இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி புனேவில் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்படுகிறது. ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயான், ஸ்டீவ் ஓ கீஃப் என நான்கு பௌலர்கள். ஓ கீஃப் – 32 வயது. அதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே களம் கண்டவர். மிகமுக்கியமான இந்தியத் தொடரை 2 ஸ்பின்னர்கள் கொண்டு ஆரம்பித்தது ஆஸ்திரேலியா. சப்போர்ட்டுக்கு மிட்சல் மார்ஷ். மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி மார்ச் 16-ம் தேதி ராஞ்சியில் தொடங்கியபோது ஸ்டார்க் இல்லை, மிட்சல் மார்ஷும் இல்லை. மேக்ஸ்வெல்தான் அவர்களின் பார்ட் டைம் பௌலர். சமயங்களில் 4 ஃபாஸ்ட் பௌலர்களோடு விளையாடும் ஆஸி அணி ஸ்பின்னர்களை நம்பிக் களமிறங்குகியது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி தொடங்கியது. அடில் ரஷித், ஜாஃபர் அன்சாரி என 2 ஸ்பின்னர்களை களமிறக்கியது இங்கிலாந்து. 3-வது ஸ்பின்னராக ‘இன்-ஃபார்ம்’ ப்ளேயராக ஆஃப் ஸ்பின்னில் மிரட்டும் மொயீன் அலி வேறு. 3 ஸ்பின்னர்களோடு களம் கண்டது குக் அண்ட் கோ. 3-வது போட்டி – அன்சாரி வேண்டாம். சோபிக்கவில்லை. 40 வயது கேரத் பேட்டைக் களமிறக்கினார் குக். 2005-ல் கடைசியாக இங்கிலாந்துக்கு ஆடிய பிறகு, கடந்த 11 ஆண்டுகளில் 1 டெஸ்ட் போட்டிதான் விளையாடினார். அதுவும் ஒரு மாதத்துக்கு முன்பு கத்துக்குட்டி வங்கதேசத்துக்கு எதிராக… ஆண்டர்சன், ப்ராட் போன்ற உலகத்தர பௌலர்கள் இருந்தும் இங்கிலாந்து நம்பியதும் ஸ்பின்னர்களைத்தான்.
அந்த இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியாவில் இன்று ஆஷஸ் தொடரில் மோதிக் கொண்டிருக்கின்றன. இங்கிலாந்து அணியில் அலி மட்டுமே ஸ்பின்னர். 4 வேகப்பந்துவீச்சாளர்கள். ஆஸ்திரேலியா, 3 வேகப்பந்து வீச்சாளர்களோடு களமிறங்கியுள்ளது. இதுதான் அந்த அணிகளின் டெம்ப்ளேட் லெவன். இதுதான் அவர்களது ஸ்டைல். ஆனால், குக், ஸ்மித் இருவரும் இந்தியாவுடன் அத்தனை ஸ்பின்னர்களைக் களமிறக்கினார்கள்? இருவருமே தொடரையும் இழந்து சென்றார்கள். குக் 4-0 என இங்கிலாந்து தோற்றதால் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக நேரிட்டது. ஆனால், இந்தியாவில் அப்படியொரு அணியைக் களமிறக்கியது அவர்களுடைய தவறில்லை.
அவர்கள் விளையாடியது இந்தியாவில். சுழல மட்டுமே செய்யும் துணைக்கண்ட ஆடுகளங்களில். ‘பௌன்ஸ்’, ‘ஸ்விங்’ போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாத அந்த பிட்ச்களில் ஆண்டர்சன், ஸ்டார்க் போன்றவர்களால்கூட எதுவும் செய்யமுடியாது.
சொல்லப்போனால், அந்த 9 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்த ஒரே போட்டி ஆஸி ஸ்பின்னர்கள் 17 விக்கெட்டுகள் வீழ்த்திய புனே போட்டி. இங்கு ஸ்பின்னர்களால் மட்டுமே ஆதிக்கம் செலுத்தம் முடியும். ஆண்டர்சன் 3 போட்டிகளில் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்னிக்கை 4. இஷாந்த் ஷர்மாவுக்கு 4 போட்டிகளில் 6 விக்கெட்டுகள். இந்த இரு தொடர்களிலும் மொத்தமாக வீழ்த்தப்பட்டது 295 விக்கெட்டுகள். அதில் ஸ்பின்னர்கள் மட்டுமே 192 விக்கெட்டுகள் வீழ்த்தினர். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு 99. அதிலும் நிறைய டெய்ல் – எண்டர்களின் விக்கெட்டுகள்தான். அஸ்வின், ஜடேஜா மட்டுமே 103 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்க, ஜெய்ந்த யாதவ், குல்தீப், மிஷ்ரா என மேலும் பல ஸ்பின்னர்களைப் பயன்படுத்தி மிரட்டியது இந்தியா.
இந்திய ஆடுகளங்கள் சுழலுக்குச் சாதகமனவை என்பதை உலகறியும். இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கு ஓகே. தென்னாப்பிரிக்க தொடர் இன்னும் சில வாரங்களில் காத்திருக்கையில், இந்த ‘கத்துக்குட்டி’ இலங்கையிடம் மீண்டும் ஏன் இப்படியான ஆடுகளங்களிலேயே ஆடவேண்டும்? இந்திய அணிக்கு முக்கியம், பலவீனமான இலங்கையை சொந்த மண்ணில் வீழ்த்துவதா? இல்லை பலமான தென்னாப்பிரிக்காவுக்கு அதன் சொந்த மண்ணில் சவால் கொடுப்பதா?
கடந்த போட்டியில்தான் ஈடன் கார்டன் பிட்ச்சின் ஸ்விங் தன்மையை பாராட்டினர். ‘தென்னாப்பிரிக்கத் தொடருக்குத் தயாராவதில் இதுபோன்ற ஆடுகளங்கள் மிகவும் உதவும்’ என வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்தனர். கே.எல். ராகுல் சொல்லியதுபோல் பேட்ஸ்மேன்களுக்கும், அதுபோன்ற ஆடுகளங்களில் ஆடுவதுதான் நம்பிக்கை அளிக்கும். கோலியும் ‘இதுபோன்ற ஆடுகளங்களில் அதிகம் ஆடவேண்டும்’ என்று வழிமொழிந்திருந்தார். ஆனால்….இப்போது நாக்பூரில் நடப்பது என்ன?