ஒருபக்கம் மக்கள் அவரை ஆராதனை செய்தார்கள். ‘நேர்வழியில் எங்களை முன்னேற்றிய தலைவன்’ என்று கொண்டாடினார்கள். மறுபுறம் அவர்மீது எண்ணற்றக் குற்றச்சாட்டுகள். மனித உரிமை மீறல் புகார்கள், எண்ணற்ற கொலைமுயற்சிகள், ‘ஒரு சர்வாதிகாரிபோல செயல்பட்டார்’ என்று விமர்சனங்கள் எழுப்பப்பட்டாலும், ஃபிடல் காஸ்ட்ரோ காலத்தால் நினைவுகூரப்பட வேண்டியவர். ஏன்…?
ஃபிடலின் வரலாறு என்பது, ஒரு தனிமனிதனின் வரலாறாக மட்டுமல்லாமல், அவர் வாழ்ந்த காலமானது, வரலாற்றின் முக்கியமான பல நிகழ்வுகள் ஒன்றுகுவியும் பகுதியில்தான் அமைந்துள்ளது. பெரும்பாலும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும், ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு எதிராகவும் புரட்சி செய்தவராகப் பார்க்கப்படும் ஃபிடலின் தந்தை ஒரு நிலவுடைமையாளர். சிறுவயதில் சுட்டித்தனங்கள் செய்யும் சிறுவனாக, பாடங்களில் விருப்பம் இல்லாத சிறுவனாக இருந்த அவரின் வாழ்க்கை, கல்லூரிப்பருவத்தில் அவர் படித்த பொதுவுடைமைக் கொள்கைமூலம் அப்படியே மாறியது. சட்டம், வரலாறு, தத்துவவியல் ஆகியவற்றை மிகுந்த விருப்போடு கற்ற அவருக்கு, அவர் கற்ற கல்வி சுரண்டலுக்கு எதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் குரல் கொடுக்கத் தூண்டியது. இளமைக்காலத்தில் ஃபிடல் மிகச்சிறந்த பேச்சாளராக, அமெரிக்காவிற்கு எதிராகவும், அமெரிக்காவின் கைப்பாவையாக விளங்கிய ஆட்சியர் பாடிஸ்டாவிற்கு எதிராகவும் குரல் கொடுக்கத் தொடங்கினார். அப்படி விழுந்த விதைதான் அவரை ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்ற பத்திரிகையை நடத்தவும் உந்தித் தள்ளியது.
தன் முதல் தாக்குதலை நடத்தும்போது காஸ்ட்ரோவிற்கு இருபத்து ஏழு வயது. பல்வேறு சூழ்நிலைக் காரணங்களால் அத்தாக்குதல் தோல்வி அடைந்தது. காஸ்ட்ரோ, நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆயினும், நீதியை மட்டுமே உயர்த்திப் பிடித்து, பாடிஸ்டா அரசின் தோல்விகளைத் தோலுரித்துக் காட்டினார். பின்பு 1955-ம் ஆண்டு அவர் விடுவிக்கப்படுகின்றார். பின்பு மெக்சிகோவில் தன்னைப்போலவே சக போராளியான சேகுவேராவைச் சந்திக்கின்றார். இருவருக்கும் கனவுகள் ஒன்றுபோலவே மலருகின்றன. சிறிது சிறிதாக இளைஞர்களையும், கியூபா நாட்டு விவசாயிகளையும் ஒன்று திரட்டி, புரட்சிக்குத் தயார் செய்கின்றார்.
பாடிஸ்டாவின் அரசிற்குப் பிறகு, காஸ்ட்ரோ தலைமை ஏற்கிறார். 1959 முதல் 1976-ம் ஆண்டு வரை கியூபா நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தார். பின்பு அதே நாட்டின் தலைவராக 1976 முதல் 2008 வரை பதவி வகித்தார். இவ்வகையில், நீண்டகாலம் ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களுக்கு மத்தியில், ஃபிடல் காஸ்ட்ரோவிற்கும் தனி ஒரு இடம் உண்டு.
உலகின் பெரியண்ணனான அமெரிக்காவில் இருந்து கியூபா வெறும் 96 மைல்கல் தொலைவுதான். என்றாலும், என்றுமே அது அமெரிக்காவைப் பார்த்து பயந்ததில்லை என்பதற்கு அவரின் ஆட்சியும், கொள்கை முறைகளும் முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. பொருளாதாரத் தடை விதிப்பு, எண்ணற்ற கொலை முயற்சிகள் என்று காஸ்ட்ரோ சந்தித்த சவால்கள் பல இருந்தாலும், ஒரு ஆட்சியாளராகக் காஸ்ட்ரோ செய்த பல சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப்படாமலேயே உள்ளது. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என்று அழைக்கப்படும் கியூபாவின் எழுத்தறிவு விகிதம் இன்று பல வளர்ந்த நாடுகளைவிட அதிகம். அதற்கு அடித்தளம் இட்டது அவருடைய எழுத்தறிவு இயக்கம்தான். குழந்தைகள், முதியவர்கள், தொழிலாளிகள், பெண்கள் என்று எவ்விதப் பாகுபாடும் இன்றி அனைவருக்கும் கட்டாய இலவசக்கல்வி அளித்தது கியூபா அரசு. “தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளுங்கள். தெரிந்தவர்கள் கற்றுக்கொடுங்கள்” என்பதே ஃபிடல் காஸ்ட்ரோவின் தாரக மந்திரம் ஆகும்.
1990-களில் நடந்த யுனெஸ்கோ ஆய்வு அறிக்கையின்படி, கியூபாவின் கல்வி அறிவு விழுக்காடு 96 ஆகும். அவர்கள் நாட்டில் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவதில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர் பெண்கள். மருத்துவத் துறையிலும் மகத்தான சாதனைகள் புரிந்த நாடாக இன்றும் உலகிற்கு முன்னோடியாகத் திகழ்வது கியூபாதான். மேலும், தாய்-சேய் இறப்பு விகிதமும் மிக மிகக்குறைவாக இருந்த நாடாகவும் இருந்தது. ஆயிரம்தான் இருந்தும் ஆட்சியின்மீது விமர்சனங்கள் இல்லாமல் இருக்குமா என்ன? இவரது ஆட்சியின்போதுதான் எண்ணற்ற கியூபர்கள் புலம்பெயர்ந்தார்கள். நாட்டில் ஒற்றை ஆட்சிமுறைதான் அமலில் இருந்தது. கருத்துச் சுதந்திரம் என்பது அங்குள்ள குடிமகனுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. நிரூபணங்கள் இல்லாவிடிலும், கியூபாவில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.
அவர் நம்மை விட்டுப்பிரிந்து இன்றோடு ஓராண்டு முடிகின்றது. நீங்கள் நினைவு கூரப்படுவீர்கள், ஃபிடல். ஏனெனில், உங்கள் நாட்டினைப் போல் அல்லாமல், இன்றும் எங்கள் குழந்தைகளை நாங்கள் பிராணவாயு இல்லாமலும், டெங்குக் காய்ச்சலாலும் இழந்து கொண்டிருக்கின்றோம்!