மாவீரர் வாரத்தில் களியாட்டங்களை தவிர்த்து புனிதத்தன்மையுடன் அனுஸ்டிக்க அனைவரும் முன்வர வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார்.
லண்டனில் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் மானிப்பாய் இந்துக்கல்லூரி, மெதடிஸ்ட் உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்வியங்காடு செங்குந்தா பழைய மாணவர் சங்கங்கள் தனித்தனியாக கழியாட்ட நிகழ்வுகளை இன்று நடாத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனால் எமது உரிமைக்காக போராட்டத்தில் தமது உறவுகளை தியாகம் செய்த மாவீரர் குடும்பங்களும், முன்னாள் போராளிகளும் மக்களும் விசனமடைந்துள்ளனர்.
இந்நிலையிலேயே இலங்கை தமிழ் அரசு கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை தமிழ் இனத்துக்காக ஆகுதி ஆக்கியவர்களின் நினைவு நாளாக மாவீரர் நாள் மதிக்கப்படுகிறது.
அவர்கள் நினைவாக கார்த்திகை 21 தொடக்கம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி பல வகையில் அனுஸ்டிக்கப்படுகிறது. விடுதலைக்காக போராடிய இனத்தின் சார்பில் தமிழ் மக்கள் ஆகிய நாம் அனைவரும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வரலாற்று நிகழ்வு ஆகும்.
எனவே ஒவ்வொரு முறையும் துயிலும் இல்லங்கள், நினைவிடங்கள், அலுவலகங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வந்துள்ளோம். ஆனால் அண்மைக் காலமாக இந்த நிகழ்வில் அரசியல் ரீதியாக தலையீடும் குழப்பங்களும் ஏற்பட்டு வருவது மிகவும் துக்ககரமான செயற்பாடாக உள்ளது. பொதுமக்கள் இது தொடர்பில் மனவேதனை அடைகிறார்கள்.
மேலும் குறிப்பிட்ட புனித வாரத்தில் கழியாட்ட நிகழ்வுகள் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டியவை. இவ்வாறு நிகழ்வுகளை நடாத்துபவர்களை தொடர்புகொண்டு, இதை நிறுத்தும்படி அல்லது ஒத்திவைக்கும்படி அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.