சினிமாவில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி, இன்று யாராலும் அசைக்க முடியாத பெரிய இடத்தை பிடித்தவர். தன் இயல்பான நடிப்பு, முகத்தோற்றத்தால் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மக்கள் செல்வனாக கொண்டாடப்படும் நடிகர் விஜய்சேதுபதி பேசுகிறார்…
* படங்களில் ஹீரோயின்கள்?
இந்த ஹீரோயின் தான் வேணும்னு கேட்பது இல்லை. ஹீரோயின்களை இயக்குனர், தயாரிப்பாளரே முடிவு செய்கிறார்கள்.
* படம் வெற்றி, தோல்வி?
நான் கதை கேட்டுட்டு, பிடித்த பின் தான் நடிக்க சம்மதிப்பேன். வெற்றி, தோல்வினு படங்களை பிரித்து பார்த்தது இல்லை.
* ஆண்டுக்கு 6 படம்?
ஆண்டுக்கு 6 படம் ரிலீசாகலாம். ஆனா, ஒரு படம் நடிக்க குறைந்தது 5 மாசம் ஆகும். சில படங்கள் சீக்கிரமே ரிலீசாகும், சில தாமதமாகும்; அவ்வளவு தான். ஓய்வு இல்லாம நடிக்க முடியாது.
* எதிர்கால பிளான்?
நான் எதையும் பிளான் பண்ணுவது இல்லை. ஹீரோ ஆவேன்னு நினைச்சு பார்த்தது இல்லை. இன்னைக்கு என்னவோ அது தான் நிஜமாயிடுச்சு.
* நடிக்கும் படங்கள்?
ஒரு நல்ல நாள் பாத்து சொல்லு, ஜூம்பா, ஷில்பா, 96.
* பெண் வேடம் எப்படி?
பெண் வேடம் கஷ்டம் தான். ஒரே மாதிரி நடிச்சா போர் அடிச்சுடும். ‘ஷில்பா’ படத்தில் பெண் வேடத்தில் நடிக்கிறேன். போஸ்டர் கூட ரிலீசாகி நல்லா வைரலாச்சு.
* அரியலுாருக்கு கல்வி உதவி?
அரியலுார் கல்வியில் பின் தங்கிய மாவட்டம்னு தெரிஞ்சுது. அங்கன்வாடி மையங்கள், காது கேளாத, கண் தெரியாத பள்ளிகளுக்கு பெரிசா உதவி கிடைக்கிறது இல்ல. இறந்து போன மாணவி அனிதா நினைவா, விளம்பர படத்தில் கிடைத்த பணத்துல 50 லட்சம் ரூபாய் உதவி பண்ணினேன்.
* அரசியலில் குதிப்பீர்களா…
ஒரு குடும்பத்தை ஒழுங்கா நடத்துறதுதே பெரிய விஷயம். அதுவும் அரசியல் பண்ணனும்னா அதிகமாக அறிவு தேவை.
* ரசிகர்களுடன் செல்பி?
என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்த மக்கள், ரசிகர்களோடு செல்பி எடுக்குறதுல ஒண்ணும் தப்பில்லையே.
* சினிமாவில் கற்றது?
ஒவ்வொரு படமும் ஒரு பாடத்தை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. அனுபவம் எல்லாருக்குமே ஒருநாள் எதையாவது கற்றுக் கொடுக்கும்.