நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக, கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன என அறியமுடிகிறது. இதன்போது, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கும் இடையில், கடுமையான வாதங்கள் இடம்பெற்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.
பெற்றோலியப் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் அர்ஜுன, அமைச்சரவைக்கு விளக்கமளிக்கும் போது இடைமறித்த அமைச்சர் தயாசிறி, “இந்நிலை, ஜனாதிபதியை இக்கட்டான நிலைக்குக் கொண்டுசெல்லும். மக்கள், ஜனாதிபதியையே திட்டுகின்றனர்” என்று குறிப்பிட்டாரெனத் தெரிகிறது. இதனாலேயே, வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.
இதன்போது உரையாற்றிய, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, “இது சிறிய பிரச்சினை அல்ல. எண்ணெயைக் களஞ்சியப்படுத்தி வைக்காத நிலையே, இப்போது உள்ள பிச்சினை. ஆனால், இது ஒரு மாபியா பிரச்சினை என்பதை மறக்கவேண்டாம். இதை இலகுவாக எடுக்கவேண்டாம். எனது காலத்திலும் இந்த மாபியா செயற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அமைச்சர் தயா கமகே, அமைச்சர் அர்ஜுனவுக்கு ஆதரவாக உரையாற்றினார் எனத் தெரிகிறது.
பின்னர் உரையாற்றிய அமைச்சர் அர்ஜுன, “இந்தப் பிரச்சினை தொடர்பாக, உடனடியாக விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும். ‘எண்ணெய் ஸ்ட்ரைக் என்று ஒரு குறுச்செய்தி பரப்பப்பட்டது. இது பற்றி விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும். நாங்கள் எப்படியாவது இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அமைச்சர் தயாசிறியைப் பார்த்து, “இந்தப் பிரச்சனையில் அமைச்சர் தயாசிறி இலாபம் தேடுவதை நினைத்து, அவருக்கு, அவருடைய அமைச்சைச் சரியாக செய்ய முடியவில்லையே என்று நான் கவலைப்படுகின்றேன்” என்று குறிப்பிட்டாரெனத் தெரிகிறது.