நாடு ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து போர்க்கப்பலைக் கொள்வனவு செய்வது மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று, இலத்திரனியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவரான ரொகான் பலேவத்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் மைத்துனரான பலேவத்த, இலத்திரனியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றிய போதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் போர் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்ட நிலையில் அதிக விலைகொண்ட போர்க்கப்பல் அவசியமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கடற்படைக்காக, 158.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஜிபார்ட் 5.1 (Gepard 5.1) ரகத்தைச் சேர்ந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
2020 அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக ரொகான் பலேவத்த கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.