இருபது பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டில், கடந்த 2013ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சய்னைட் மோகனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், லீலாவதி என்ற பெண்ணை தனியார் விடுதியில் வைத்து கற்பழித்து, நகைகளை கொள்ளையடித்துவிட்டு ‘சயனைட்’ தடவிய கருகலைப்பு மாத்திரை கொடுத்து கொலை செய்த வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்க்கும் மேல்முறையீட்டு மனு விசாரணை நேற்று (புதன்கிழமை) மேல் நீதிபதிகள் ரவி மாலிமத், ஜான் மைக்கேல் குன்கா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது லீலாவதியை கற்பழித்து, நகைகளை கொள்ளையடித்து கொன்ற வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த மேல் நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து மோகனை விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந் நிலையில், கடந்த 12 ஆம் திகதி அனிதாவின் வழக்கு சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மேல் நீதிமன்றம், அந்த வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில் வக்கீல் இன்றி ‘சயனைடு’ மோகன் தானாகவே வாதாடி கொண்டார். இருப்பினும், வேறு சில வழக்குகளில் ‘சயனைடு’ மோகனுக்கு ஆயுள் தண்டனைகள் கொடுக்கப்பட்டு உள்ளதால் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
மங்களுர் சிறப்பு கீழ் நீதிமன்றில் இருபது பெண்களின் கொலை வழக்கும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வருகின்றது. இந் நிலையில், முதற்கட்டமாக அனிதா பரிமார், லீலாவதி மற்றும் சுனந்தா புஜாரி ஆகியோரின் கொலை வழக்கு விசாரணையில் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது மோகன்குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரிவிட்டிருந்தார்.
இந் நிலையில், தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்ட 3 வழக்குகளை எதிர்த்து ‘சயனைடு’ மோகன் கர்நாடக மேல் நீதிமன்றில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.