மெர்சல் படம் கேரளாவிலும் வெளியாகி அங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று இரண்டாவது வாரத்தை இந்தப் படம் எட்டியுள்ளதால் அதற்கான பேனர்களை திருவனந்தபுரத்தில் கட்டிவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய கேரள விஜய் மக்கள் இயக்கம், திருவனந்தபுரம், செயலாளர் லவ் டுடே ஸ்ரீநாத் என்பர் பேருந்து மோதி மரணமடைந்துள்ளார்.
விஜய்யின் தீவிர ரசிகரான இவரை மையமாக வைத்து உருவான போக்கிரி சைமன் என்ற மலையாளப் படம் கடந்த மாதம் வெளிவந்தது. ஸ்ரீநாத்தின் திடீர் மரணம் கேரள விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்கிரி சைமன் படத்தில் ஸ்ரீநாத் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அப்பானி சரத், தகவல் அறிந்ததும் ஸ்ரீநாத் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மூன்று வருடங்களுக்கு முன்பு கத்தி படம் வெளிவந்த போது பாலக்காட்டில், விஜய் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்த உன்னி கிருஷ்ணன் என்ற இளைஞர் தவறி விழுந்து இறந்தார். இந்த வருடம் ஜனவரி மாதம் பைரவா படம் வெளிவந்த போது, நள்ளிரவில் கட்-அவுட் கட்டி விட்டு வீட்டுக்குத் திரும்பிய, காஞ்சிபுரம் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற செயலாளர் இமயம் ரவி, சில பேரால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இரண்டு பேரும் அகால மரணமடைந்தது அப்போது விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது.
இப்போது, திருவனந்தபுரத்தில் லவ் டுடே ஸ்ரீநாத், நள்ளிரவில் கட்-அவுட் கட்டிவிட்டு விபத்தில் அகால மரணடைந்தது விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஸ்ரீநாத் மரணமடைந்த தகவல் விஜய்க்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் இருக்க விஜய், தன் ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
விஜய் மட்டுமல்ல மற்ற நடிகர்களும் தங்களது ரசிகர்களை இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும்.