பூநகரியில் மாமியாரை வெட்டிப் படுகொலை செய்ததுடன், மனைவியை வெட்டிக் காயப்படுத்திய குடும்பத் தலைவருக்கு 8 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது யாழ்ப்பாண மேல் நீதிமன்று.
கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி யோகராசா சிவகலா (வயது -– 42) வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
அவரது மகள் வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் உயிர் தப்பினார்.
இவர்களை வெட்டினார் என்ற குற்றச்சாட்டில் கணேசஐயா காந்தரூபன், சிவகலாவின் மருமகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கிளிநொச்சி நீதிவான் மன்றில் நடந்த பூர்வாங்க விசாரணையில் நடந்து கொலை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கின் குற்றப்பகர்வுப் பத்திரம் யாழ்ப்பாண மேல்நீதிமன்றில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகள் நடைபெற்று நேற்றுத் வழக்குத் தீர்க்கப்பட்டது.
சிவகலாவை வெட்டிக் கொன்றதுடன் அவரது மகளான தனது மனைவியையும் காந்தரூபன் வெட்டிக் காயப்படுத்தினார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி அறிவித்தார்.
கொலைக் குற்றத்துக்காக 7 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனையும், வெட்டிக் காயப்படுத்திய குற்றத்துக்காக ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார் இரண்டு தண்டனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இரண்டு குற்றங்களுக்கும், தலா 3 ஆயிரம் ரூபா வீதம் 6 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.
அதனை செலுத்தத் தவறின் மேலும் இரண்டு மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.