யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் மிருக பலியிடல் வேள்வி நடத்துவதற்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்று நிரந்தரத் தடைவிதித்தது.
இந்து ஆலயங்களில் பலியிடல் பூசை வழிபாடுகளை நடத்துவதற்கு இறைச்சிக்கடைச் சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி சபைகள் அனுமதி வழங்கி வந்தமை அதிகார முறைகேடு என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி யுள்ளார்.
ஆலயங்களில் இறைச்சிக் கடைச் சட்டங்களின் கீழ் மிருகங்கள் பலியிடப்படுவதைத் தடைசெய்யக் கோரி ைசவ மகா சபை யாழ்ப்பாண மேல்நீதிமன்றில் நீதிப் பேராணை மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
மனு மீதான விசாரணைகள் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் 2016 ஆம்ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைபெற்று வந்தது. வேள்விக்கு இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டது.
மிருக பலியிடலை நடத்தும் ஆலய நிர்வாகி களை எதிர் மனுதாரர்களாகக் கொள்ளாமல், பொதுச் சுகாதாரப் பரிசோதகர், சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச சபை என்பவற்றுக்கு எதிராகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும் வேள்வி பூசை நடத்தும் கவுணாவத்தை நரசிம்மர் ஆலய நிர்வாகத்தி னர் தம்மையும் வழக்கில் ஒரு தரப்பினராகச் சேர்க்குமாறு இடையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்து தமது தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
கவுணாவத்தை நரசிம்மர் ஆலயத்தில் வேள்வி நடத்தப்படுவது, இறைச்சி க்கடைச் சட்டத்தின் பிரகாரமும், மதவுரிமைச் சட்டத்தின் பிரகாரமும், மிருக பலி சட்டத்தின் பிரகாரமும் அத்து மீறிய செயற்பாடு என்று மனுதாரர்கள் தமது வாதங்களை முன்வைத்தனர்.
300 வருடங்களுக்கு மேலாக, மரபுமுறையாக இந்த வழிபாட்டு முறை நடைபெற்று வருகின்றது. இதனைத் தடை செய்யக் கோருவது, எமது மத வழிபாட்டு உரிமையில் தலையீடு செய்யும் செயற்பாடு என்று எதிர்த்தரப்பினர் வாதங்களை முன்வைத்தனர்.
ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் நூற்றுக்கணக்◌கான மிருகங்களைப் பலியிடுவது மிருக வதைச் செயற்பாடு என்றுகூறி அவர்களின் வாதங்களை ஏற்க நீதிமன்று மறுத்துவிட்டது.
‘‘சமய விழாக்களுக்கு அனுமதி வழங்கும் போது, இறைச்சிக்கடைச் சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கக்கூடாது. சமய விழாக்கள் சட்டத்தின் கீழேயே அனுமதி வழங்கவேண்டும்’’ என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
‘‘யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட இந்து ஆலயங்களில் பூஜைகளின் போதோ வேறு சந்தர்ப்பங்களிலோ மிருகங்களைப் பலியிடக் கூடாது என்று மன்று தடை விதிக்கின்றது. அதற்கு எந்த உள்ளூராட்சி சபைகளும், நீதிவான் நீதிமன்றங்களும் அனுமதி வழங்கக்கூடாது. அதனையும் மீறி எவரேனும் மிருக பலியிடலை மேற்கொண்டால் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யமுடியும். முறைப்பாட்டின் பிரகாரம் குற்றமிழைத்தவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு நீதிவான் மன்றில் முற்படுத்தப்படவேண்டும்’’ என்று தீர்ப்பளித்தார்.
இந்தத் தடையுத்தரவை வடமாகாண உள்ளூராட்சி சபைகளின் அமைச்சராக உள்ளமையினால் முதலமைச்சருக்கும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கும், மல்லாகம் நீதிவான் மன்றுக்கும் அனுப்பி வைக்குமாறு மேல் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி பணித்தார்.