நியூசவுத்வேல்ஸ் அணியிலிருந்து முன்னாள் டெஸ்ட் தொடக்க வீரர் எட் கோவனை நீக்கியதற்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
சீசனின் டாப் ஸ்கோரரான எட் கோவனை அணியிலிருந்து நீக்கியது ஆஸ்திரேலியாவில் சர்ச்சையைக் கிளப்ப அதற்கு தானும் ஒரு காரணம் என்று ஸ்டீவ் ஸ்மித் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சர்வதேச போட்டிகள் சீசன் தொடங்கவிருப்பதால் எட் கோவனுக்குப் பதிலாக டேனியல் ஹியூஸ் என்ற இடது கை வீரருக்கு வாய்ப்பளித்ததாக ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஸ்மித் அதிகாரபூர்வ அணித்தேர்வாளர் இல்லையென்றாலும் பயிற்சியாளர் டிரெண்ட் ஜான்சனுடன் சேர்ந்தே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
சிட்னியில் தன்னுடைய புதிய புத்தகமான தி ஜர்னி-யை அறிமுகம் செய்து பேசிய ஸ்மித், “எனக்கு அதில் பங்கு உண்டு, மிகவும் கடினமான முடிவு. எட் கோவன் மிக அருமையாக கடந்த ஆண்டு ஆடி வந்தார், டேவிட் வார்னருடன் இணைந்து சிறப்பாக ஆடினார், நானும் அணிக்குள் மீண்டும் வந்திருந்தேன். நியூசவுத்வேல்ஸில் இப்படித்தான் வீரர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் எட் கோவன் மீது கோடரி விழுந்தது. 6-ம் நிலையில் ஆட டேனியல் ஹியூஸை நாங்கள் தேர்வு செய்தோம்.
டேனியல் ஹியூஸ் சரியான பார்மில் இருந்தார். கிரேடு கிரிக்கெட்டில் 200 அடித்தார். டேனியல் ஹியூஸ் எதிர்காலத்துக்கான வீரர். எனவே என்னுடனும் வார்னருடனும் இவர் ஆட வேண்டும் என்று தேர்வு செய்தோம்.
ஆனால் நான் எட் கோவனிடம் இதனை நேரடியாகத் தெரிவித்தேன், நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்பும்போது அவர் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை மீண்டும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். டேனியல் ஹியூஸ் ஒரு சர்வதேச வீரருக்கான தகுதியைக் கொண்டுள்ளார், அவருக்கு வயது 28 எனவே இவருக்கு வாய்ப்பளிக்க முடிவெடுத்தோம்” என்றார் ஸ்மித்.