சமீப காலங்களில் இந்திய ஒருதினப் போட்டி வெற்றியைத் தீர்மானித்து வரும் சாஹல், குல்தீப் கூட்டணியை முறியடிக்க ஸ்வீப் ஷாட்களைப் பயன்படுத்தினோம் என்று நியூஸிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் போட்டியில் மும்பையில் டெய்லர், லேதம் சாதனை விரட்டல் கூட்டணி படைத்து அரிய வெற்றி ஒன்றை இந்திய மண்ணில் ஈட்டினர். இதனால் விராட் கோலியின் சதம் வீணானது.
இந்நிலையில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது குறித்து ராஸ் டெய்லர் கூறியதாவது:
ஸ்வீப் ஷாட்கள் மூலம் ஸ்பின்னர்களுக்கு நெருக்கடி கொடுத்தோம். இதனால் அவர்கள் வீசும் அளவை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். லேதம் இதனை தனித்த திறமையுடன் நடத்திக் காட்டினார். ரிவர்ஸ் ஸ்வீப் ஆடு என்றேன் அவர் ஆடினார். தொடர்ந்து ஸ்வீப் செய்து கொண்டிருந்தார்.
மூன்றரை மணி நேரம் கடும் உஷ்ணத்தில் ஆடிய பிறகே நல்ல தொடக்கம் அமைவது அவசியம் என்பதை உணர்ந்தோம். மேலும் நல்ல தொடக்கத்தின் ஊடாக ஸ்பின்னர்களை சிறந்த முறையில் கையாள முடியும் என்று நினைத்தோம். முன்பெல்லாம் நியூஸிலாந்து அணி இங்கு வந்து திணறியதையே பார்த்திருக்கிறேன்.
கப்தில், மன்ரோ கூட்டணி அருமையாகத் தொடங்க நானும் லேதமும் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்தோம். அதன் பிறகே வெற்றிக்கு அருகில் இருக்கிறோம் என்பதை உணர்ந்தோம்.
இந்தியாவில் நிறைய போட்டிகளை ஆடியிருக்கிறேன், சர்வதேசப் போட்டி மற்றும் ஐபிஎல் போட்டிகளில் ஆடியிருப்பதால் அந்த அனுபவம் கைகொடுத்தது.
ஆட்டத்தின் நடு ஓவர்களில் ஏகப்பட்ட பந்துகளை ரன் இல்லாமல் ஆடி வந்தோம், ஆனால் நேற்று இதனை தன்னுணர்வுடன் தவிர்த்து கிரீஸில் கொஞ்சம் சுறுசுறுப்பாக சிங்கிள்களை எடுகக் வேண்டும் என்று முடிவெடுத்தோம். பயிற்சி ஆட்டத்தில் லேதமும் நானும் ரன்கள் எடுத்தோம், தற்போது அங்கிருந்து முதல் போட்டிக்கும் அந்த ஆட்டத்தை எடுத்து வந்தது திருப்தி அளிக்கிறது.
போல்ட் மிகச்சிறப்பாக வீசினார், இந்திய அணி அடுத்த போட்டியில் இன்னும் கடினமாக எங்களை அணுகும். ஒரு வெற்றி எங்களுக்கு தொடரை கொடுத்து விடும். ஆனால் புனே பிட்ச் கடினமானது என்று நாங்கள் அறிவோம். இந்த வெற்றியிலேயே தங்கி விடாமல் அடுத்த போட்டியிலும் நன்றாகத் தொடங்க வேண்டும்.
இவ்வாறு கூறினார் ராஸ் டெய்லர்.