சமூக வலைதளத்தில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, ‘நீயா? நானா?’ நிகழ்ச்சி திரையிடல் தடை செய்யப்பட்டது.
வாரம்தோறும் ஞாயிறு அன்று விஜய் டிவியில் ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
‘நீயா நானா’ நிகழ்ச்சியில் யார் அழகு? கேரளத்துப் பெண்களா? தமிழ்நாட்டுப் பெண்களா? என்ற தலைப்பில் இன்று விவாதம் நடைபெறுவதாக இருந்தது. இந்தத் தலைப்பு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையானது.
பெண்களை காட்சிப் பொருளாகப் பார்ப்பது மட்டுமின்றி, அதை வைத்து விவாதம் நடத்துவதற்கு பலதரப்பினரிடமிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. பெண்கள், பொதுமக்கள் என எல்லா தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்தன.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று மனிதி பெண்ணிய அமைப்பினர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். அழகு தொடர்பான ‘நீயா நானா’ நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாக காவல் ஆணையர் அலுவலகம் சார்பில் அதிகாரபூர்வ தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இன்றைய நீயா நானா நிகழ்ச்சி நிறுத்திவைக்கப்பட்டு, ஏற்கெனவே ஒளிபரப்பான நிகழ்ச்சியே மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அறிவார்ந்த, காத்திரமான கருத்துகளையும், சமூக பிரச்சினைகளை விவாதப் பொருளாகவும் முன்வைக்கும் நிகழ்ச்சியாக ‘நீயா நானா’ இருக்க வேண்டும் என்பதே நேயர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.