அம்பாறை -ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாந்திபுரம் கிராமத்தினுள், நள்ளிரவு உட்புகுந்த காட்டு யானைகள் ஆறு வீடுகளை உடைத்து நாசம் செய்துள்ளதுடன், வீட்டினுள் இருந்த அரிசி நெல் சீனி உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் இழுத்துச் சென்றுள்ளது.
அத்தோடு மக்களால் செய்கை பண்ணப்பட்டுள்ள மேட்டுநிலப்பயிர்களையும் துவம்சம் செய்துள்ளன.
நள்ளிரவு உட்புகுந்த யானைகளை கண்ட பிரதேச மக்கள் ஒன்றினைந்து விரட்டுவதற்காக முயற்சித்தபோதும் அதிகாலைவரை அக்கிராமத்தை விட்டு செல்லவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனால் பீதி அடைந்த அப்பாவி பொதுமக்கள் அருகில் இருந்த அரச கட்டடமொன்றில் தப்பிச் சென்று தஞ்சமடைந்துள்ளனர்.
பல வருடங்களாக தாம் இவ்வாறான துன்பத்தை அனுபவித்து வருவதாகவும் உயிர்களை கையில் பிடித்த வண்ணம் வாழ்வதாகவும் கவலை தெரிவித்தனர்.
தமது கிராமத்தில் அமைக்கப்பட்ட 21 வீடுகளும் அவ்வப்போது யானையினால் உடைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான தீர்வினை அரசாங்கமோ, அதிகாரிகளோ பெற்றுத்தரவில்லை எனவும் குறிப்பிட்டனர்.
அம்பாறை மாவட்டத்தில் அன்மைக்காலமாக யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படும் அதேவேளை பல உயிர்களும் காவு கொள்ளப்பட்டுள்ளதாகவும் தமது கிராமம் சாந்தியை இழந்து தவிப்பதாகவும் கூறுகின்றனர்.
ஆகவே அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுத்து தங்களது குடியிருப்புக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரி;க்கை விடுத்தனர்.
இதேவேளை தம்மை பாதுகாக்கும் பொருட்டு பாதுகப்பற்ற மின்சார வேலிகள் மக்களால் அமைக்கப்பட்டுள்ளதையும் அதனையும் உடைத்து யானை உட்புகுந்துள்ளமையையும் இங்கு காணமுடிந்தது.