தீபாவளிக் கொண்டாட்டம் முடிந்துவிட்டது. ஆனால் பட்டாசுத் தொழிலை நம்பியே கிடக்கும் 25 லட்சம் தொழிலாளர்களின் வயிறு நஷ்டத்தில் எரிகிறது என்கிறார்கள். பண்டிகைக்கால மகிழ்ச்சியை கொண்டாட ஊருக்குப் போனவர்கள் கைகளிலும் பட்டாசுகள், உள்ளூரில் இருப்பவர் கைகளிலும் பட்டாசுகள். ஆனால், அந்தப் பட்டாசுக்கான மருந்துகளை உருட்டித் தேய்த்த விரல்களுக்கு போதிய விலை இல்லை, விலை இல்லாததால், அவர்களுக்கு வயிறார சோறும் இல்லை.
‘குட்டி ஜப்பான்’ எனப்படும் தமிழகத்தின் சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள், ஆயிரக் கணக்கில் இருக்கின்றன. இங்கிருந்துதான் வட மாநிலங்களுக்கும் பட்டாசுகள் அனுப்பி வைக்கப் படுகின்றன. ஜி.எஸ்.டி, உச்சநீதிமன்றத் தடை, சீன பட்டாசுகளின் வருகை போன்ற பல காரணங்களால் பட்டாசு விற்பனை குறைந்து போனதாக ஒரு தகவலும் உண்டு. டெல்லி, மும்பை போன்ற வட மாநிலப் பகுதிகளில் தீபாவளிக்கு அதிக வரவேற்பு இருப்பதால் இங்கிருந்து பட்டாசு ஏற்றுமதியும் அதிகமாகவே இருந்தது. இப்போது, அதற்கும் சோதனை வந்து விட்டது. ‘பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுகிறது’ என்ற காரணம் காட்டி முக்கிய நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இயற்கையும் இன்னொரு பக்கம் மழையைப் பொழிந்து பட்டாசை நமத்துப் போக வைத்திருக்கிறது. ஆக, இரண்டு வருமானத்தையும் இழந்துள்ளனர் தொழிலாளர்கள்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, “உரிமம் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 2 ஆயிரத்து 500 கடைகள் திறக்கப் படவில்லை, இதன் காரணமாகவும் பட்டாசு விற்பனை கடந்த ஆண்டைவிட 60 சதவீதம் குறைந்து உள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெறும் நான்கு நாட்கள் இடைவெளியில் பட்டாசு விற்பனை உரிமம் வழங்கப்பட்டதும் தேக்கத்துக்கு ஒரு காரணம். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் போது, பட்டாசுக்கான வரி 14 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இது மக்களின் வாங்கும் சக்தியைக் குறைத்து விட்டது. பட்டாசு வாங்கிய 90 சதவீத மக்கள் கிரெடிட் கார்டு மூலமாகவே வாங்கி உள்ளனர். கடந்த ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்றுத் தீர்ந்த பட்டாசுகள், இந்த ஆண்டு வெறும்ரூ.400 கோடிக்கு மட்டுமே விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையில் 40 சதவீதம் மட்டுமே” என்கிறார்.
சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் சங்கச் செயலாளர் அனீஷ், “கடந்த தீபாவளியின்போது 30 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்ட கிரெடிட் கார்டு, இந்த முறை 90 சதவீதம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. பட்டாசு விற்கும் உரிமத்தை தீயணைப்புத்துறையினர் மூன்று நாட்களுக்கு முன்னர்தான் கடைகளுக்கு கொடுத்தார்கள்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பட்டாசு விற்பனை லைசென்ஸ் பெறும் திட்டத்தை, தெளிவாக்கினார். நாட்டின் அனைத்து மாநில உள்துறைச் செயலாளர்களுக்கும் அவருடைய உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி பட்டாசு விற்பனையாளர்களிடம் மூன்று மாதம் முன்னரே அப்ளிகேஷனை வாங்க வேண்டும். ஒரு மாதம் முன்னரே விற்பனை உரிமம் (லைசென்ஸ்) கிடைக்க வகை செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டது. ஆனால், நிலவரம் என்னவென்றால், தீபாவளி முடிந்த பின்னும் 70 சதவீத பட்டாசுக் கடைகளுக்கு லைசென்ஸ் கிடைக்கவில்லை. ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட கூடுதல் வரிவிதிப்பு, பணப்புழக்கம் இல்லாத நிலை போன்ற துணை காரணங்களும் விற்பனையை பெரிதும் பாதித்துள்ளது.
நாங்கள் இப்படியெல்லாம் போராடி, மல்லுக்கு நின்று ஒய்.எம்.சி.ஏ. போன்ற இடங்களில் கடைசி நாளில் பட்டாசுக் கடை போட்டோம். ஆனால், சரிக்கட்ட வேண்டியவர்களை சரிக்கட்டி பாரிமுனையிலும், தீவுத்திடல் வாசலிலும் பட்டாசு விற்பனை நடந்திருக்கிறது. இவர்கள் யாரிடம் போய் லைசென்ஸை வாங்கினார்கள்? வரியைக் கட்டிவிட்டு நாங்கள் அனைத்தும் இழந்து விட்டு ரோட்டில் நிற்கிறோம். மூன்றாண்டுகள் அனுபவம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது என்ற விதிமுறைகள் குறித்து இங்கே யார் கவலைப்பட்டார்கள், ஐந்து வயது சிறுவன் கைகளிலும் பட்டாசு பண்டல்களைக் கொடுத்து விற்க அனுப்பி வைத்த காட்சிகளை அதிகாரிகள் யாரும் பார்க்க வில்லையா என்ன? நேரடியாகவும், மறைமுகமாகவும், விற்பனை செய்யும் வகையிலும் என்று சுமார் 25 லட்சம் பேரின் வாழ்க்கையில் மோசமாக விளையாடி இருக்கிறது அரசாங்கம். மத்திய அமைச்சர் வழிகாட்டுதலை காற்றில் பறக்க விட்டு, எங்களை நஷ்டத்தில் தள்ளி இருக்கிறார்கள். தலைமைச் செயலாளரை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளோம். எங்கள் நஷ்டத்துக்கான தீர்வு கிடைக்காத பட்சத்தில் கோர்ட்டை நாடுவோம்” என்கிறார். ‘சார் எவ்வளவு நஷ்டம் இருக்கும்?’ என்றோம்… “சென்னையில் மட்டுமே 100 கோடி ரூபாயைத் தாண்டுகிறது” என்றார் அனீஷ். அதிர்ச்சியானது நமக்கு.
இதுமட்டுமின்றி விற்பனையானது போக மிச்ச பட்டாசுகள் டன் கணக்கில் உள்ளது. இப்படி மீதமானவைகளை சேமித்து வைக்கக்கூடாது என்கிறது சட்டம். அரசின் மெத்தனத்தால் வீணான இத்தனை லட்சக்கணக்கான பட்டாசுகளை நாங்கள் எங்குகொண்டுபோய் கொட்டுவது என வெடிக்கிறார்கள் மற்ற பட்டாசு வியாபாரிகள்.