எதிர்வரும் 23ம் திகதி முதல் இராணுவ பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்திலிருந்து முறையாக விலகிக் கொள்ளாத, இராணுவ சேவையிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் 23ம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 15ம் திகதி வரையில் இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த பொது மன்னிப்புக் காலத்தில் தங்களது படை முகாம்களுக்குச் சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பொது மன்னிப்பு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
சுமார் 30,000 பேர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.