‘‘எமது உயிருக்கு ஏதாவது நிகழ்ந்தால் நாமே பொறுப்பு’’ என்ற கடிதத்தை சிறைச்சாலை மருத்துவரிடம் எழுதிக் கொடுத்து விட்டு, மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் சிறைக்குத் திரும்பியுள்ளனர்.
வவுனியாவில் நடத்தப்பட்ட தமது வழக்கு அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து ம.சுலக்ஷன், இ.திருவருள், க.தர்சன் ஆகிய மூவரும் அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 25ஆம் திகதியிலிருந்து தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அநுராதபுரம் சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அநுராதபுரம் பொது மருத்துவமனைக்கு நேற்று முதன் முதலாக அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு குருதிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மீளவும் அநுராதபுரம் சிறைச்சாலை மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
அதன் பின்னர், எமது உயிருக்கு ஏதாவது நிகழ்ந்தால் நாமே பொறுப்பு என்று கடிதத்தை எழுதி சிறைச்சாலை மருத்துவரிடம் கொடுத்து விட்டு அவர்கள் சிறைச்சாலை மருத்துவமனையிலிருந்து வெளியேறி தமது அறைகளுக்குத் திரும்பினர்.