கோல்மால் படங்களின் வரிசையில் நான்காம் பாகமாக, இந்த தீபாவளிக்கு காமெடி சரவெடியாக வெடிக்க களமிறங்குகிறது “கோல்மால் அகைன்”. ரோகித் ஷெட்டி இயக்கத்தில், அஜ்ய் தேவ்கன், பரிணிதி சோப்ரா, தபு, அர்சத் வர்ஷி, துஸார் கபூர், ஸ்ரேயாஸ் தல்படே, குணால் கேமு, பிரகாஷ் ராஜ், நீல் நிதின் முகேஷ், சஞ்சய் மிஸ்ரா என பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கி இருக்கும், கோல்மால் அகைன் படத்தின் அனுபவம் குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டார் அஜய் தேவ்கன்…
பாலிவுட்டில் நான்கு பாகங்களில் நடித்த ஒரே நடிகர் நீங்கள் தான், அந்த அனுபவம் பற்றி?
இதற்கு காரணம் நான் அல்ல, இந்த புகழ் அனைத்தும் கோல்மால் படங்களின் வரிசைக்கு தான். அந்த படங்களில் வருகின்றன ஒவ்வொரு கேரக்டரும் ஒரு வகையில் மிகவும் பிரபலமானவர்கள் தான். ஜானி லீவர், சஞ்சய் மிஸ்ரா போன்றவர்களின் கேரக்டர் மிகவும் பிரபலமானது. இந்த படம் நான்கு பாகங்கள் வரும் அளவுக்கு பிரபலமாக இருக்கிறது என்றால் முக்கிய காரணமே ரசிகர்கள் தான். அவர்கள் விரும்புவதால் தான் இது சாத்தியமாகி உள்ளது. மேலும் படக்குழும் அதற்கு அதிகப்படியாக உழைத்துள்ளார்கள்.
மல்டி ஸ்டார் படத்தில் நீங்கள் சந்தித்த பிரச்னை என்ன?
ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போது நான், என் ரோலை நன்கு அறிந்து தான் நடிப்பேன். எந்த நடிகருடனும் எனக்கு பிரச்னை ஏற்பட்டது இல்லை. நான்கு பாகங்களில் நடித்துவிட்டதால் இந்தப்படத்தில் நடித்தவர்கள் எல்லோரும் ஒரு குடும்பமாக தான் இருந்தோம். எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. மேலும் படம் முழுக்க ஒரே சிரிப்பு, கொண்டாட்டமாக தான் இருந்தது.
கரீனா கபூர் நடிக்காதது பற்றி?
கதைக்கு அவர் தேவைப்படவில்லை. கரீனாவிற்கு பதில் பரிணிதி சோப்ரா தான் இந்த ரோலுக்கு பொருத்தமாக இருந்தார். கரீனா மிகச்சிறந்த நடிகை, அவரை நாங்கள் எல்லோருமே மிஸ் செய்தோம். அநேகமாக கோல்மால் 5 அவர் நடிப்பார் என்று நினைக்கிறேன்.
தொடர்ந்து உங்களது படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாவது பற்றி?
அப்படியில்லை, எந்த நடிகரும் தங்களது படங்களை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம். எனது படம் அப்போது ரிலீஸ் செய்தால் தான் பொருத்தமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் பார்க்கும் விதமாக, கோல்மால் படம் இருக்கும். ஆகையால் தான் தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம்.
ஆக்ஷ்னிலிருந்து எப்போது காமெடியாக நடிக்க தொடங்கினீர்கள்?
பொதுவாக ஒரு நடிகன் என்றால் எந்த மாதிரியான ரோலிலும் நடிக்க வேண்டும். இஷ்க் படத்தை முடித்தபிறகு என்னாலும் காமெடி படத்தில் நடிக்க முடியும் என்ற எண்ணம் வந்தது. அதன்பின்னர் ரொமான்ட்டிக் காமெடி படமான பியார் டு ஹோனா ஹி ஹே படத்திற்கு பிறகு தான், கோல்மால் போன்ற காமெடி படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். நான் காமெடியை சரியாக செய்கிறேனா, இல்லையா என்று தெரியாது. ஆனால் மக்களை சிரிக்க வைப்பது என்பது கஷ்டமான ஒன்று என்பதை மட்டும் புரிந்து கொண்டேன்.
உங்களின் பாத்சாகோ படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லாதது பற்றி?
பாத்சாகோ படம் வசூல் இல்லை என்கிறீர்களா… என்னை பொறுத்தமட்டில் பட்ஜெட்டிற்கு அதிகப்படியான வசூலை படம் கொடுத்துள்ளது. மக்கள் படத்தை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டார்களா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் படம் நல்ல வசூலை தந்துள்ளது, அது மகிழ்ச்சியளிக்கிறது.