தங்கல் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அமீர்கான தயாரித்துள்ள படம் “சீக்கெரட் சூப்பர்ஸ்டார்”. தங்கல் படத்தில் அமீரின் சின்ன வயது மகளாக நடித்த ஜைரா வாசிம் முக்கியமான ரோலில் நடிக்க, அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். தீபாவளி வெளியீடாக வரும் சீக்கெரட் சூப்பர்ஸ்டார் படம் பற்றி அமீர்கான் நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது.
படத்தில் உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க?
நான் இசையமைப்பாளராக நடிக்கிறேன். இந்த மாதிரி இதற்கு முன்னர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த கதையை கேட்டபோது இப்படத்தில் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இயக்குநர் அத்வைத் தான் இந்த ரோலில் நான், தான் நடிக்க வேண்டும் என்றார். அதன்பின்னர் ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்தோம், சிறப்பாக வந்தது, எனக்கும் அது பிடித்திருந்தது. நானும் நடிக்க சம்மதித்தேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் மிகவும் கஷ்டமான ஒரு வேடம், ரசிகர்கள் எப்படி நம்மை ஏற்று கொள்வார்கள் என்பதை பார்க்க ஆர்வமாய் உள்ளேன்.
அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பு அளித்தது எப்படி?
சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தின் கதை பிடித்திருந்தது. ஆனால் அதை படமாக எடுக்க மிகவும் தயக்கமாக இருந்தது. நான் எப்போதும் என்னிடம் கதை சொல்ல வரும் புதியவர்களிடம், உங்களது கதையை சில காட்சிகளாய் படமாக்கி கொண்டு வர சொல்வேன். அந்த சின்ன வீடியோவிலேயே அவர்கள் எந்தளவுக்கு படத்தை இயக்கியுள்ளார்கள், அவர்களிடம் திறமை எப்படிப்பட்டது என்பதை நன்கு புரிந்து கொள்வேன். அதேப்போன்று அத்வைத்தையும் செய்ய சொன்னேன் அவரின் திறமையை பார்த்துவிட்டு இந்த வாய்ப்பை வழங்கினேன். அத்வைத் நல்ல திறமையாளர், அறிவாளி மற்றும் கடுமையாக உழைக்க கூடியவர்.
உங்கள் படத்துடன் கோல்மால் அகைன் ரிலீஸாவதால் உங்கள் படத்திற்கு தியேட்டர்கள் குறைவாக கிடைத்திருப்பது பற்றி?
குறைந்த தியேட்டரில் எனது படம் ரிலீஸாவது என்பது தவறான தகவல். என் படத்தை பொறுத்தவரை 150 முதல் 200 தியேட்டர்கள் கிடைத்தால் போதுமானது தான், அது கிடைத்துவிட்டது. பொதுவாக இரண்டு படங்கள் ரிலீஸாகும் போது முதல்நாள் மட்டும் தான் இரண்டு படங்களுக்கும் போட்டி இருக்கும். மறுநாள் முதல் ரசிகர்கள் எதை விரும்புகிறார்களோ அதற்கு ஏற்றபடி தியேட்டர்கள் உரிமையாளர்களும் மாறி கொள்வார்கள்.
இந்தியாவில் தியேட்டர் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டுமா?
நீங்கள் கூறுவது உண்மை தான். எனக்கும் அப்படி ஒரு எண்ணம் உள்ளது. மக்கள் தொகையில் நம் நாடு மிகப் பெரியது. நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்தும் வருகிறது. ஆனால் தியேட்டர்கள் குறைவாகத்தான் உள்ளது. சீனாவில் 45 ஆயிரம் தியேட்டர்கள் உள்ளன. மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நம் இந்தியாவில் 5 ஆயிரம் தியேட்டர்கள் தான் உள்ளது. நம்மை விட 9 மடங்கு தியேட்டர்கள் சீனாவில் அதிகம் உள்ளன. ஆகவே இந்தியாவில் தியேட்டர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
ஷாரூக்கான், சல்மான் படங்கள் சரியாக போகாதது பற்றி உங்கள் கருத்து?
நட்சத்திரங்களுக்கு வெற்றி – தோல்வி சகஜமான ஒன்று. ஒன்றிரண்டு தோல்வி படங்களால் ஒருவரின் திரையுலக பயணம் முடிந்து விடப்போவது கிடையாது. ஒரு படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றால் அந்த வெற்றியில் ஹீரோவுக்கும் பங்கு உண்டு. என்னுடைய பிகே படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் அதற்கான பலன் எனக்கு கிடைக்கவில்லை. படம் நன்றாக இருந்தால் தான் வசூலும் சிறப்பாக இருக்கும். என்னை பொறுத்தமட்டில் ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பது அந்த படத்தின் கதாசிரியரும், இயக்குநரும் தான். பெரிய நட்சத்திரங்கள் முதல்நாள் வசூலை பெரிதாக கொடுக்க தான் உதவியாக இருப்பார்கள்.
அமிதாப் பச்சன் உடன் நடிப்பது பற்றி?
அமிதாப் உடன் நடிப்பது அற்புதமான அனுபவமாக உள்ளது. அவருடன் இணைந்து நடிப்பதன் மூலம் நிறைய விஷயங்களை அவரிடம் கற்று கொள்ள முடிகிறது, அவரைப்பற்றியும் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. அமிதாப் கடின உழைப்பாளி. ஒரு படத்திற்கு என்ன தேவை என்பதை உணர்ந்து நன்றாக நடிக்க கூடியவர். அதனால் தான் 50 ஆண்டுகளுக்கு மேலாக அவரால் இந்த துறையில் நிலைத்து நிற்க முடிகிறது. ரசிகர்களுடனும் தொடர்ந்து இணைப்பில் இருக்க முடிகிறது.