முதல் குண்டு வீசப்படும்வரை வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை தொடரும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடு சபையின் தடையை மீறி தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்திவரும் வடகொரியா குறித்து பேசும்போது ரெக்ஸ் டீல்லர்சன் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம்முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.
வடகொரியா அதிபர் கிம் ஜிங் உன்னை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் வடகொரியா விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறும்போது, “நான் ஒன்றை தெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை மூலம் வடகொரியாவுடனான பிரச்சினையை தீர்க்க நினைக்கிறார்.அவர் போர் புரிய விரும்பவில்லை. முதல் குண்டு வீசப்படும் வரை வடகொரியாவுடனான அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை தொடரும்” என்றார்.