கடந்த ஆட்சிக்காலத்தில் கொழும்பில் வைத்து கடத்தப்பட்ட தனது மகனையும் கணவனையும் 10 வருடங்களாக தேடி வந்த மன்னாரைச் சேர்ந்த தாயொருவர், இறுதிவரை அவர்களை காணாது மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கச் செய்யப்பட்ட மன்னார் முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த ரொசான்லி லியோனின் தாயாரும், அமலன் லியோனின் மனைவியுமான ஜெசிந்தா பிரீஸ் (வயது-55) என்பவரே மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
இத் தாயின் கணவன் மற்றும் மகனுடன் சேர்த்து மொத்தம் 11 பேரை கடற்படையினர் கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படும் நிலையில், அது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
வழக்கு விசாரணைகளின் போது கடற்படையின் இரகசிய தடுப்பு முகாமில் கண்டெடுக்கப்பட்ட அடையாள அட்டைகளில், இவர்கள் இருவரது அடையாள அட்டைகளும் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பில் கொழும்பில் நடைபெறும் வழக்கிற்கு ஒவ்வொரு முறையும் சென்றுவந்த இத் தாய், கடந்த வழக்கு விசாரணைக்கு சென்றுவந்த பின்னர் ஏக்கத்துடன் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) மாரடைப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் இத் தாய் கலந்துகொண்டு குரல் கொடுத்து வந்ததோடு, கொழும்பில் நடைபெறும் வழக்கிற்கு ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்புடன் சென்று வந்துள்ளார்.
இறுதி யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் பலர் இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உறவினர்கள் இரவு பகலாக மாதக்கணக்கில் இன்றும் போராடி வருகின்றனர். கடந்த செப்டெம்பர் மாதமும் கிளிநொச்சியில் இவ்வாறு தனது மகனை எட்டு வருட காலமாக காணாது தவித்த தாயொருவர் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.