அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிட மிருந்து எந்தவொரு ஆக்கபூர்வமான பதிலும் கிடைக்கப் பெறவில்லை. சட்டமா அதிபருடன் பேசுவேன் என்பதையே மீண்டும் தனது பதிலாக அரச தலைவர் கூறியுள்ளார்.
அமைச்சர் மனோகணேசன் நேற்று மதியம் அரச தலைவரைச் சந்தித்துப் பேசியபோதும், அரசியல் கைதிகள் விடயம் குறித்து அரச தலைவர் மைத்திரிபால உருப்படியான பதிலை வழங்கவில்லை.
‘‘இதுபற்றி ஆராய்ந்து முடிவை எடுப்பதாக மைத்திரி என்னிடம் கூறினார். தமிழ் மக்களை பொறுத்தவரையில் திருப்திகரமான பதிலாக இல்லாமல் இந்த விவகாரம் தொடர்ந்து இழுபறியிலேயே இருப்பதையே காட்டுகிறது’ என்று அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் தொடர் உணவு ஒறுப்புப் போராட்டம், வடக்கில் முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் போன்ற விடயங்கள் தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை, நேற்று மதியம் அமைச்சர் மனோகணேசன் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தப் பேச்சுத் தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடக்கில் நடைபெறும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அங்கு சட்டம் ஒழுங்குக்குப் பாதகம் இல்லை என்று தனக்கு வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரும், இராணுவத் தளபதியும்கூறியுள்ளார் என்று அரச தலைவர் என்னிடம் கூறினார்.
சட்டம் ஒழுங்குக்கு பாதகம் இல்லையானாலும் அரசியல்ரீதியாக இது பெரும் நெருக்கடி நிலமையை வடக்கில் ஏற்படுத்தியுள்ளது என்று நான் அரச தலைவருக்கு எடுத்து கூறினேன்.
சட்டமா அதிபரை அலைபேசியில் தொடர்பு கொண்ட அரச தலைவர் இதுபற்றிய சட்ட மா அதிபரின் கருத்தை கேட்டுத் தெரிந்து கொண்டார்.
இந்த வழக்கின் சாட்சிகளாக இருக்கின்ற தமிழீழ விடுதலை புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களே தங்களுக்கு பாதுகாப்பைக் கோரி வவுனியாவுக்கு செல்ல இயலாது என்று கூறுகின்றனர் எனவும், இதனாலேயே சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் கூறுகின்றார் என்றும் அரச தலைவர் என்னிடம் தெரிவித்தார்.
இன்று போர் முடிந்த நிலையில் நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் எவரும் சென்று வரக்கூடிய நிலையில், சட்டமா அதிபர் இத்தகைய முடிவை எடுத்திருப்பது தமிழ் மக்களுக்கு தவறான செய்தியை தருகிறது என்று நான் எடுத்து கூறினேன்.
வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள தேசிய தமிழ் மொழித் தின விழாவை பொறுப்பேற்று செய்யும் எமது கூட்டணியின் பிரதி தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான ராதாகிருஷ்ணன் ஆகியோரும் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு இது குறித்துப் பேசினார்கள்.
அவர்கள் இருவரும்கூட இது தொடர்பில் எனது கருத்தையே கொண்டுள்ளனர் என்று நான் அரச தலைவரிடம் கூறினேன். இது பற்றி தான் மேலும் ஆராய்ந்து முடிவை எடுப்பதாக மைத்திரி என்னிடம் கூறினார்.
இது இன்று தமிழ் மக்களை பொறுத்தவரையில் திருப்திகரமான பதிலாக இல்லாமல் இருக்கும். இந்த விவகாரம் தொடர்ந்து இழுபறியிலேயே இருப்பதை காட்டுகிறது.
இது நமது அரசுக்கு, தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற நற்பெயரை பாதிக்கும். நியாயமான முடிவை எடுங்கள் என்று கூறிவிட்டு வந்தேன். இது தொடர்பில் தான் மேலும் ஆராய்ந்து பார்த்து முடிவுகளை எடுப்பதாக அரச தலைவர் தெரிவித்தார்’’ – என்றுள்ளது.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அரச தலைவர் மைத்திரி, நீதி அமைச்சர் தலதா, சட்டமா அதிபர் ஆகியோரை அரச தலைவர் செயலத்தில் நேற்று முன்தினம் இரவு சந்தித்துப் பேசியுள்ளார்.
அரச தலைவர் செயலகத்தில் நடைபெற்ற வேறு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, பேச்சு நடைபெற்றுள்ளது.
சாட்சியமளிப்பதில் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியவருடன் இது தொடர்பில் பேசுவதாக சட்டமா அதிபர் இந்தச் சந்திப்பில் கூறியுள்ளார்.
இதன் பின்னர் எந்தவொரு தகவலும் சட்டமா அதிபரிடமிருந்து கிடைக்கப் பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.