கிழக்கு மாகாண முஸ்லிம்களை மீண்டும் மேலாதிக்க சக்திகளின் அடிமைகளாக மாற்றுகின்ற செயற்பாடுகளுக்கு ரவூப் ஹக்கீமும் ரிஷாத் பதியுதீனும் துணைபோய்க் கொண்டிருக்கின்றனர் என தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.
கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழுள்ள நடா நிறுவனத்தின் பணிப்பாளருமான அன்வர் முஸ்தபா, தேசிய காங்கிரசில் இணைந்து கொள்வது தொடர்பான ஊடக மாநாடு நேற்று திங்கட்கிழமை இரவு கல்முனையில் நடைபெற்றபோதே அதாவுல்லா இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
“முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் தொடர்பில் எவ்வித குறிக்கோள்களுமின்றி பயணிக்கின்ற சில முஸ்லிம் கட்சிகள், எமது முஸ்லிம்களை படுகுழியில் தள்ளுகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. நல்லாட்சியை கொண்டு வந்தவர்கள் நாங்களே என்று மார்தட்டிக்கொள்கின்ற அமைச்சர்களான ரவூப் ஹக்கீமும் ரிஷாத் பதியுதீனும் இந்த ஆட்சி முஸ்லிம்களுக்கு எதிரான பொல்லாட்சியாக மாறியிருப்பது தொடர்பில் பொறுப்புக்கூற கடமைப்பட்டிருக்கின்றனர்.
நாங்கள் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொண்டே அவர்கள் தொடர்ந்தும் முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்து வருகின்றனர். மாகாண சபைகள் திருத்த சட்டத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு பாரிய அநியாயம் இழைக்கப்பட்டிருக்கிறது. அதற்கும் இவர்கள் கைதூக்கி ஆதரவு வழங்கியுள்ளனர்.
கிழக்கு மாகாண மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் ரவூப் ஹக்கீமுக்கோ றிஷாத் பதியூதீனுக்கோ எதுவும் தெரியாது. அவர்கள் இன்று ரணில் விக்கிரமசிங்கவின் கைக்கூலிகளாக மாறியிருக்கின்றனர்.
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை மூலம் கிழக்கு முஸ்லிம்களுக்கு பாரிய அநியாயம் இழைக்கப்பட்டிருக்கிறது. இந்த சதியினால் இங்கு வாழ்கின்ற முஸ்லிம்கள் ஆபத்தான சூழ்நிலைக்குள் தள்ளி விடப்பட்டிருக்கின்றனர்.
வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு பதிலீடாக கரையோர மாவட்டம் என்ற ஒன்றை கோருகின்றனர். இந்த இணைப்பை தீர்மானிக்க வேண்டியவர்கள் இங்கு வாழும் மக்களேயன்றி சம்மந்தனும் ஹக்கீமும் அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனைய சமூகங்களின் நல்லிணக்கத்துடன் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளுக்காக தூரநோக்கு சிந்தனையுடன் பயணிக்கின்ற எமது தேசிய காங்கிரஸில் அன்வர் முஸ்தபா போன்ற புத்திஜீவிகள் இணைந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.
மாற்றுத் தலைமைகளினால் சமூகம் எவ்வாறு ஏமாற்றப்படுகிறது என்பதை அவர்கள் நேரடியாக கண்டுணர்ந்தே அங்கிருந்து விலகி, எம்முடன் இணைய முன்வந்துள்ளனர். சத்தியம் என்றோ ஒருநாள் வென்றே தீரும் என்பதில் நாம் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை, தேசிய காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ், கலாநிதி எஸ்.எல்.றியாஸ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.