“புதிய அரசமைப்புத் தொடர்பாக வெளியாகியிருக்கும் இடைக்கால அறிக்கையில், தீர்க்கமான முடிவு எட்டப்படாமல் தெரிவுகளுக்கு விடப்பட்டுள்ள மூன்று விடயங்கள் தொடர்பில் சாதகமான முடிவு கிடைத்தால் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி வரைபை ஏற்கும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டும், மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை எந்தச் சந்தர்ப்பத்திலும் மத்திய அரசு திருப்பி எடுக்கமுடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான பொறிமுறை, நிதி அதிகாரம் மாகாணங்களுக்கு முழுமையாக வழங்கப்படவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே புதிய அரசமைப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும்” என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களிலிருந்து ஓர் அங்குலம்கூட இனி கீழிறங்க முடியாது. எமது நிலைப்பாட்டிலிருந்து நாம் ஏற்கனவே கீழிறங்கி வந்துள்ளோம்.
இடைக்கால அறிக்கையில் சில விடயங்கள் தெரிவுக்காக விடப்பட்டுள்ளன. அவை எமக்கு முற்றுமுழுதாகச் சார்பாக வரவேண்டும்.
முக்கியமாக மூன்று விடயங்கள் எமக்குச் சாதகமாக அமையவேண்டும். வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்ட ஒரு மாகாணமாக இருத்தல், வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப் பெறமுடியாது என்ற பொறிமுறை இறுக்கமானதாகக் குறிப்பிடப்படல், மாகாணங்களுக்கு நிதி அதிகாரம் முழுமையாக வழங்கப்படுதல் என்ற மூன்று விடயங்களும் எமக்குச் சாதகமாக இருக்கவேண்டும். அவ்வாறு அமைந்தால்தான் இறுதி வரைபை நாம் ஏற்போம் என்று அமெரிக்கா, ஐ.நா. அதிகாரிகளுக்கு நான் எடுத்துரைத்தேன்” – என்றார்.