தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் 90 ரன்களுக்கு 2-வது இன்னிங்சில் சுருண்டு படுதோல்வி கண்ட வங்கதேசம், தன் டெஸ்ட் வரலாற்றில் 3-வது மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது.
முதல் டெஸ்ட் போட்டியில் 117 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஸ்பின்னர் கேஷவ் மஹராஜ் 50 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி சாதனைப் படைத்தார். விசித்திர ஆக்சனில் வீசும் இடது கை சைனமன் பால் ஆடம்ஸ் 16 போட்டிகளில் 50 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மஹாராஜ் தனது 12-வது போட்டியில் 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
வங்கதேச அணி 49/3 என்ற நிலையிலிருந்து மேலும் 375 ரன்கள் தேவையான நிலையில் அடுத்த 7 விக்கெட்டுகளை 41 ரன்களுக்குப் பறிகொடுத்து 90 ரன்களுக்குச் சுருண்டது. துணைக்கண்டத்துக்கு வெளியே தென் ஆப்பிரிக்க அணியின் ஆகக்குறைந்த ரன்களாகும் இது.
இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டார்வினில் நடைபெற்ற 2003-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 97 ரன்களுக்குச் சுருண்டதே ஆகக்குறைவான ரன் எண்ணிக்கையாக துணைக்கண்டத்துக்கு வெளியே இருந்து வந்தது.
கடந்த ஆண்டில் தென் ஆப்பிரிக்கா பெற்ற 8 வெற்றிகளில் 2 இன்னிங்ஸ் வெற்றிகள், 3 வெற்றிகள் 250 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றது ஆகியவை உள்ளடங்கும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துக் கொண்டால் தென் ஆப்பிரிக்கா 2 டெஸ்ட் போட்டிகளை 300 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது தற்போதுதான். வங்கதேசம் 333 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்துக்கு எதிராக தங்களது முந்தைய 8 வெற்றிகளில் தென் ஆப்பிரிக்கா 7 முறை இன்னிங்ஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
முதல் 9 டெஸ்ட் போட்டிகளில் 43 விக்கெட்டுகள் என்று அசத்திய வங்கதேச ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஸ் விளையாடிய முதல் மோசமான டெஸ்ட் போட்டியாகும் இது. முதல் டெஸ்டில் இவர் 67 ஓவர்களை வீசி 247 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்ற முடியவில்லை. இம்ரான் தாஹிர் 260 ரன்கள் கொடுத்து விக்கெட் எதையும் எடுக்காமல் முடிந்துள்ளார். இது அடிலெய்டில் இம்ரான் தாஹிருக்கு 2012-13 தொடரில் நடந்த சாத்துமுறை. முதல் டெஸ்ட் போட்டியில் மெஹதி ஹசன் மிராஸுக்கு தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்கள் பாடம் கற்பித்தனர்.