உணவுகள் எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காத விசித்திர நோயால் பத்து வயது சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளான். அதிக பசி காரணமாக வீட்டில் இருக்கும் பேப்பர்களை உண்ணும் நிலைக்கு அச்சிறுவன் தள்ளப்பட்டுள்ளான்.
தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த சோலா என்பவருடைய மகன் காடென் பெஞ்சமின் (10). இந்த சிறுவன் பிராடர்-வில்லி சிண்ட்ரோம் என்னும் பசி அடங்காத விசித்தர நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். 10 வயதாகும் காடென் 90 கிலோ எடையுடன் உள்ள நிலையில், எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காததால், கையில் கிடைக்கும் அனைத்தையும் அவன் சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். இதனால் உடலின் எடை அதிகரித்து மூச்சுக்கூட விடமுடியாத நிலையில் தவித்து வரும் காடென் செயற்கை சுவாசம் மூலமாக சுவாசித்து வருகின்றான்.
இது குறித்து சிறுவனின் தாய் சோலா கூறுகையில், “மூன்று வயது இருக்கும் போது, சிறுவன் 40 கிலோ இருந்தான். அதிக பசி காரணமாக காடென் கையில் கிடைப்பதையெல்லாம் சாப்பிடுவான். கழிவறையில் இருக்கும் டாய்லட் பேப்பர்கள் மற்றும் வீட்டில் இருக்கும் எல்லா வித பேப்பர்களையும் கூட சாப்பிட்டுவிடுவான். அவனால் பசியை அடக்க முடியாது. சாப்பிட எதுவும் கிடைக்காத நேரத்தில் தரையில் கிடக்கும் மரத்துண்டுகளை கூட சாப்பிட்டு விடுவான். இவனுக்கு பயந்தே வீட்டில் உள்ள உணவு பொருட்களை அவன் கண்ணில் படாதபடி மறைத்து வைப்பேன். சமையலறை அலமாரிகள் மற்றும் குளிர்சாதன பெட்டியை எப்போதும் பூட்டி வைத்திருப்பேன். அவனை கண்காணிப்பதே பெரும் வேளையாக உள்ளது. மற்ற குழந்தைகள் போல் விளையாட முடியாததால் சில நேரங்களில் காடென் அதிக மன உளைச்சளுக்கு ஆளாகிறான்” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
காடெனை பரிசோதித்த பிரிட்டோரியாவில் ஸ்டீவ் பிகோ கல்வி மருத்துவமனை மருத்துவர் கூறுகையில், மரபணு கோளாறு காரணமாக இந்த நோய் ஏற்படலாம். இந்த அரிய வகை நோயால் உலகில் 20000 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கு இதுவரை மருந்துகளே கண்டுபிடிக்கபடவில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காடென் எடை அதிகரித்து கொண்டே செல்வது மிக ஆபத்து, காடென் இனி உயிர் வாழ டயட்டில் இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.