சமீபகாலமாக இசையமைப்பாளர்களும் நடிகர்களாக மாறி வருகிறார்கள். விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோரைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா அதியும், மீசைய முறுக்கு படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். தனிப்பட்ட இசை ஆல்பங்களை உருவாக்கி அதன் மூலம் கவனிக்கப்பட்டு திரையுலகத்திற்குள் நுழைந்தவர் ஹிப்ஹாப் தமிழா.
மீசைய முறுக்கு படத்தில் நாயகனாக அறிமுகமாவது மட்டுமல்லாமல், இயக்குனராகவும் அறிமுகமாகிறார். இயக்கம், இசை, நடிப்பு என முக்கிய மூன்று துறைகளையும் கையில் எடுத்துள்ளார். இளைஞர்களின் கல்லூரி வாழ்க்கை, பெற்றோர்களின் கனவு, காதலை சுமக்கும் ஜாதி உள்ளிட்ட பல விஷயங்களையும் ஜாலியாக சொல்லியிருக்கிறார் ஆதி. அதோடு, இந்தப் படத்தில் பல புதுமுகங்களுக்கு வாய்ப்புகளை அளித்துள்ளார். அவர்களில் பலரும் யு டியூப் மூலம் புகழ் பெற்றவர்கள்தான்.
இத்தனை புதுமுகங்களும் சேர்ந்து அறிமுகமாகும் மீசைய முறுக்கு படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆக முதல் படத்திலேயே இயக்குநராகவும, நடிகராகவும் முத்திரை பதித்திருக்கிறார் ஆதி.