இராணுவ வீரர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள், நாட்டிற்கு சுதந்திரத்தை வென்று கொடுத்த இராணுவத்தினருக்கு அவமரியாதை செய்யப்படுகின்றது என்பது நல்லாட்சி அரசு மீது இப்போது இருக்கும் ஓர் குற்றச்சாட்டு.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை வெளியிடுகின்றவர்கள் ஆட்சிக்கு எதிரானவர்கள் மட்டுமே என்பது அறிந்த விடயம். ஆயினும் ஏன் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது என்பது தெரியாத விடயம்.
அத்தோடு இதில் அரசின் நிலைப்பாடு என்ன? என்பதும் முக்கிய கேள்வி. இந்த இடத்தில் அரசு எந்த நிலையிலும் இராணுவ வீரர்களை தண்டிப்பதனை நோக்கமாக கொண்டு செயற்படவில்லை.
மேலும் நல்லாட்சி தரப்பு எந்த நிலையிலும் இராணுவத்தினரை தண்டிக்க மாட்டோம் என்பதில் உறுதியான நிலைப்பாட்டினைக் கொண்டு உள்ளது. ஜனாதிபதியும் அடிக்கடி இதனை நினைவு படுத்தியவாறே இருக்கின்றார்.
ஆனால் இந்த விடயத்தில் அரசின் இலக்கு கடந்த கால ஆட்சியாளர்கள் மீதே என்பது தெளிவாக தெரிகின்றது. அடுத்தடுத்து முன்னாள் இராணுவத்தலைவர்களும், புலனாய்வுத் துறையினரும் கைது செய்யப்பட்டு கொண்டு வருகின்றனர்.
இதற்கு காரணம் அரசு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவிற்கு விரிக்கும் வலையே என்பதே தெளிவு எனவும் கூறப்படுகின்றது.
இந்த இடத்தில் அடுத்த ஜனாதிபதியாக மகிந்த அணியினர் முன்னிருத்த இருப்பது கோத்தபாயவையே என்பதனை மகிந்த தரப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் கோத்தபாயவும் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய மிக முக்கியமான நபர், அவரது அல்லது அவர் மூலமாக நல்லாட்சிக்கு சிக்கல் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அரசு அதீத அக்கறை கொண்டுள்ளது.
இதனால் கோத்தபாயவை முடக்க அரசு எத்தனிப்பதன் ஊடாக மகிந்த தரப்பினையே முடிக்க முடியும். அதற்காக அரசு காய் நகர்த்த தொடங்கிய அதே சமயம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, கோத்தபாய தலைமையில் ஓர் மரணப்படை இயங்கியதாக வாக்குமூலம் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் வேகமான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டு முன்னாள் இராணுவ அதிகாரிகளும், புலனாய்வுத்துறையினரும் கைது செய்யப்பட்டுக் கொண்டே வருகின்றனர்.
இந்த இடத்தில் கோத்தபாய மீது தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் கை வைத்து விட முடியாது. அதனால் அதன் பின்னர் ஏற்படும் விளைவு மிக ஆபத்தானது.,
அதாவது இராணுவ புரட்சி, மக்களின் புரட்சியாக கூட ஆட்சிக்கு எதிராக மாறிவிடும் சாத்தியக்கூறு உண்டு. காரணம் கோத்தபாய மற்றும் மகிந்தவை இன்றும் வெற்றி வீரர்களாகவே மக்கள் நோக்குகின்றனர்.
இதனை தெளிவாக அறிந்த அரசு கோத்தபாயவை குறிவைத்து காய் நகர்த்தி வருகின்றது. கோத்தபாயவும் தமக்கு எதிராக இரகசிய வலை பின்னப்படுகின்றது என்பதை நன்றாக அறிந்து கொண்டார்.
அதன் காரணமாகவே மரணப்படை குற்றச்சாட்டுகளும், கொலைக் குற்றச்சாட்டுகளும் அவர் மீது வலுப்பெற்ற அதேசமயம் நாடு கடந்து சென்று விட்டார் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இதனை மேலும் உறுதி படுத்துகின்றது அண்மையில் ஜனாதிபதி குருநாகல் நகர் கூட்டத்தில் வைத்து கூறிய கருத்து.
“நாட்டில் இராணுத்தினரை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டோம், அத்தோடு அவர்களை தண்டிக்கவும் நான் இடம் கொடுக்க மாட்டேன் ஆனால்..,
விளையாட்டு வீரர்களையும், ஊடகவியலாளர்களையும் கொன்றவர்களையும், கடத்தியவர்களையும் தண்டிக்காமல் விடமாட்டோம்” என ஜனாதிபதி அழுத்தமாக தெரிவித்தார்.
இந்தக் கருத்து அவர் கோத்தபாயவை முன்னிட்டு கூறியதாகவே அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வடக்கில் நடந்த குற்றச் செயல்கள் மூலம் ராஜபக்சர்களை தடுப்பது, தண்டிப்பது நடைபெறாத விடயம் ஆனால் தெற்கில் நடந்த கொலைகளுக்கு தண்டனை வழங்குவது சாத்தியமே.
அதனால் தகுந்த ஆதாரங்களைத் திரட்டும் செயற்பாடுகளை அரசு வேகமாக செயற்படுத்திக் கொண்டு வருகின்றது.
இந்த நேரத்தில் கோத்தபாயவை சிக்கலில் இருந்து தப்ப வைக்கும் நோக்கத்துடனேயே இராணுவத் தரப்பு தண்டிக்கப்படுகின்றது, என்ற புரளிக்கதைகள் மக்களிடையே பரப்பப்பட்டு வருவதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இப்போது ஊடகவியலாளர்கள் கொலைகள், கடத்தல்கள் போன்றவற்றோடு மரணப்படை குற்றச்சாட்டும் கோத்தபாய மீது வலுவடைந்து விட்டது. இந்த நேரம் அவர் நாட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோத்தபாயவை தண்டிப்பதன் ஊடாக மகிந்த தரப்பிற்கு பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்துவதே அரசின் நகர்வு எனவே கோத்தபாய சிக்குவாரா? ஆட்சிக்கு எதிரான சக்திகள் முடக்கப்படுமா என்பதும் கேள்விக் குறி.