புழுக்கமான எஸ்யுவி வாகனத்திற்குள் கிட்டத்தட்ட ஏழு மணித்தியாலங்கள் வரை கவனிப்பாரற்று விடப்பட்டதால் 2-வயது பெண்குழந்தை மரணமடைந்தாள். இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த பராமரிப்பு நிலைய சொந்தகாரருக்கு வழங்கப்பட்ட 22-மாத சிறைத்தண்டனை எதிர்பாராதது மட்டுமன்றி அதிர்ச்சியானதும் என சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
நிலைய சொந்தகாரருக்கு 22-மாதங்கள் சிறைத்தண்டனையும் 3-வருடங்கள் தகுதி காண் கால தண்டனையும் வெள்ளிக்கிழமை நியுமார்க்கெட் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டது.
கடந்த மாதம் ஒலேனா பன்விலோவா என்ற சந்தேக நபர் யூலை மாத கோடை வெப்பத்தில் கிட்டத்தட்ட ஏழு மணித்தியாலங்கள் சிறு குழந்தையை பராமரிப்பு நிலையத்திற்கு வெளியே அனாதரவாக விட்டதனால் குழந்தை இறந்து விட்டதென சாட்சியங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதால் கிரிமினல் அலட்சிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
வாகனத்திற்குள் பிள்ளை இறந்ததென்பதை பராமரிப்பு நிலைய சொந்தகாரரான இவர் எவரிடமும் சொல்லவில்லை.
இச்சோக சம்பவம் 2013 யூலை 8 நெடுஞ்சாலை 7 மற்றும் டவ்ரின் வீதிக்கருகில் தோன்ஹில் பகுதியில் அமைந்திருந்த வீட்டு சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் நடந்தது.
நான்கு வருடங்கள் இரவு பகலாக வேதனை அனுபவித்து வந்தபோது சந்தேக நபர் ஒரு தடவையேனும் தன்னிடம் வந்து மன்னிப்பு கேட்கவில்லை என வருத்தத்துடன் சிறுமியின் தாயார் எவட்ரொப்வா நீதி மன்றத்தில் கூறினார்.
எத்தனை வருடங்கள் சிறைத்தண்டனை விதித்தாலும் எனது மகள் எவா திரும்ப கிடைக்கமாட்டாள் என தெரிவித்தார்.
சட்டவிரோதமான குறிப்பிடப்பட்ட பராமரிப்பு நிலையத்தில் பன்விலோவா அவரது மகள் மற்றும் அவரது கணவன் ஆகியோர் இருந்த சமயம் எவா இறந்துள்ளாள்.
சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சட்ட விரோத பராமரிப்பு நிலையம் நடாத்தியதற்காக இம்மூவர் மீதும் ஒன்ராறியோ நர்சரி சட்டம் குற்றம் சுமத்தியது. மூவருக்கும் 30நாட்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் 15,000டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.
அரச வழக்கறிஞர் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையும் 3-வருடங்கள் தகுதிகாண் காலமும் விதிக்கும் படி கேட்டுள்ளார். எதிர் தரப்பு 15மாதங்கள் சிறைத்தண்டனை கேட்டதாக அறியப்படுகின்றது.
மாகாணத்திற்கெதிராகவும் உரிமம் பெறாத பராமரிப்பு நிலைய சொந்தகாரர்களிற்கு எதிராகவும் எவாவின் பெற்றோர் 3.5மில்லியன் டொலர்கள் உரிமை கோரிக்கை வழக்கு தொடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.