ஜெயலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டை, பிரித்தானியாவை சேர்ந்தவரிடம் இருந்து, கூலிப் படையினர் மூலம் சசிகலா குடும்பத்தினர் மிரட்டி வாங்கியதாக பகீர் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கோடநாடு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளர் பிரித்தானியாவை சேர்ந்த, பீட்டர் கிரேக் ஜோன்ஸ். இவர், தன்னிடம் இருந்து கோடநாடு எஸ்டேட் கைமாறியது குறித்து, ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் விபரம்
என் பெற்றோர், பிரித்தானைய பிரஜைகள். எனக்கு, மார்கரெட், கிறிஸ்டின், ரோசலின் மற்றும் டயான் என நான்கு சகோதரிகள். அவர்களில், மார்கரெட்டும், கிறிஸ்டினும், பிரித்தானியாவில் உள்ளனர். மற்ற இருவரும், பெங்களூரில் வசிக்கின்றனர். எங்களுக்கு, கர்நாடகாவின் குடகு பகுதியில், 298 ஏக்கர், காபி எஸ்டேட் உள்ளது.
காபி கொட்டைகளை, பெங்களூரிலிருந்து ஏற்றுமதி செய்கிறோம். ஆந்திரா வங்கி மற்றும், விஜயா வங்கிகளில், எங்களுக்கு கணக்குகள் உள்ளன.
1975ல், கோத்தகிரியில் உள்ள கோடநாடு டீ எஸ்டேட்டை, 33 லட்சம் ரூபாய்க்கு வாங்கினோம். அதன் மொத்த பரப்பளவான, 958 ஏக்கரில், 60 ஏக்கரை, 1976ல், விற்று விட்டோம்.
மீதமுள்ள, 898 ஏக்கர் மட்டுமே எங்களிடம் இருந்தது. எஸ்டேட்டை விலைக்கு வாங்கிய போது, விஜயா வங்கியில், 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கினோம்.
பின், 1978ல், கனரா வங்கியில் கடன் பெற்று விஜயா வங்கி கடனை அடைத்தோம். 1995 வரை அந்தக் கடன் தொகை, 3.5 கோடி ரூபா யாக உயர்ந்தது. இதற்கிடையில், கோடநாடு எஸ்டேட்டை 1985 முதல் விற்க முயன்றோம். ராஜரத்தினம், சசிகலா மற்றும் உடையார்
குடும்பத்தை சேர்ந்தவர்கள் கோடநாடு எஸ்டேட்டை விலைக்கு வாங்க என்னை சந்தித்தனர். அவர்களுடன், தமிழக அரசின், ‘டேன் டீ’ நிறுவன அதிகாரிகளும் வந்தனர்.
சில நாட்கள் கழித்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், கோடாநாடு எஸ்டேட்டை பார்வையிட்டார். அதன்பின் ராஜரத்தினம் என்பவர் எங்களை அணுகி, டீ எஸ்டேட்டை அவர் வாங்க விரும்புவதாக கூறினார்.
இதுதொடர்பாக, ஐந்து முறை பெங்களூரில் பேச்சு நடந்தது. இரண்டு முறை நான் பங்கேற்றேன். மூன்று முறை என் குடும்பத்தினர் பங்கேற்றனர். பேச்சின் போது, ராஜரத்தினம் விதித்த நிபந்தனைகள் எங்களுக்கு ஒத்து வரவில்லை. அதனால், அவர் சொல்பவருக்கு எஸ்டேட்டை விற்க முடியாது என தெரிவித்து விட்டோம்.
இதன்பின், ஆறு மாதம் கழித்து, ‘நம்பர் பிளேட்’ இல்லாத வண்டியில், குண்டர்கள் சிலர் கோட நாட்டிற்கு வந்து, சென்னையை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே எஸ்டேட்டை விற்க வேண்டும் என மிரட்டியதாக என் மேலாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து, 1993 அக்டோபர் 25ல், பெங்களூரு சூலுார் பொலிசில் புகார் அளித்தேன். மறுநாள், நீலகிரி மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் என்னை சந்தித்து, புகாரை திரும்ப பெற வலியுறுத்தியதால் புகாரை வாபஸ் பெற்றேன்.
பின், அடிசன்ஸ் மற்றும் எஸ்.ஆர்.குரூப்பை சேர்ந்தவர்கள் எங்களை அணுகினர். நாங்கள், 9.60 கோடி ரூபாய் விலை கூறினோம். சவுத் இந்தியா ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தினரும், எங்களை அணுகினர். ஆனால், அரசியல் செல்வாக்கால் அவர்களை எஸ்டேட்டை வாங்க விடாமல் சிலர் தடுத்து விட்டனர்.
இதையடுத்து, சென்னையை சேர்ந்த உடையார் அர்ஜுன்லால் என்பவரை என்னை சந்திக்க அனுப்பி வைத்தார். அவரது சந்திப்பின் போது நடந்த பேச்சின் படி, சென்னையில், அவரையும், உடையாரையும் நான் சந்தித்தேன். இது, 1994ல், நடந்தது.
எங்களது பேச்சு, அப்போதைய தமிழக அட்வகேட் ஜெனரலான, ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் நடந்தது. அப்போது, கிருஷ்ணமூர்த்தி யார் என்றே எனக்கு தெரியாது. அதன்பின் தான், அவர் தமிழக அட்வகேட் ஜெனரலாக இருந்தவர் என்பதும் உடை யாரின் உறவினர் என்றும் தெரிய வந்தது.
எஸ்டேட் டிற்கு, நான், 9.50 கோடி ரூபாய் விலை கூறினேன். பின், 7.50 கோடி ரூபாய் தருவதாகவும், எஸ்டேட் பெயரில் உள்ள சில கடன்களை அடைப்பதாகவும் அவர்கள் சம்மதித்தனர்.
இதன்பின், எங்களுக்கு தருவதாக சொன்ன 7.50 கோடி ரூபாயை, வங்கி வரைவோலையாக, எங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் கொடுத்தனர். ஆனால், வங்கியில் வாங்கிய கடனை அடைக்க பணம் எதுவும் தரவில்லை.இதையடுத்து, உடையார் குடும்பத்தினருக்கு எஸ்டேட் கைமாறியது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த பொலிசாரிடம் இந்தத் தகவலை தெரிவித்துள்ளேன்.
கொடநாடு டீ எஸ்டேட்டில், காவலாளிகள் மற்றும், ‘கேட் கீப்பர்கள்’ உண்டு. சில சமயங்களில் சுற்றுலா பயணிகளும், எங்கள் எஸ்டேட்டை பார்க்கவும், புகைப்படம் எடுக்கவும் வருவர். இவ்வாறு அவர் தன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதே, சொத்து குவிப்பு வழக்கில் உடையாரின் மருமகள், ராதா வெங்கடாச்சலம் அளித்த வாக்குமூலத்தில், தங்களது குடும்பத்தினர் பெயரில், தன் மாமனார் வாங்கிய கோடநாடு எஸ்டேட், பின் சசிகலா குடும்பத்தினருக்கு, 7.60 கோடி ரூபாய்க்கு கைமாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவும், தன் மாமனாரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் என்பதால், இந்த சொத்து, ஜெயலலிதா மற்றும் சசிகலா விருப்பத்தின்படி மாற்றப்பட்டது என்றும் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இதன்படி பார்த்தால், சசிகலா குடும்பத்தினரின் மறைமுக மிரட்டல் காரணமாகவே பீட்டர் கிரேக் ஜோன்ஸ் கோடநாடு எஸ்டேட்டை, உடையார் குடும்பத்தினருக்கு கைமாற்றி, பின், அது சசிகலா குடும்பத்திற்கு மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.