வட கிழக்கு நைஜீரியாவில் மூன்றாண்டுகளுக்குமுன் 276 பள்ளி சிறுமிகள் கடத்தப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து 82 பேரை போகோ ஹராம் குழுவை சேர்ந்த இஸ்லாமியவாத தீவிரவாதிகள் விடுவித்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
போகோ ஹராம் தீவிரவாதிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பரிமாற்றம் மூலம் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு பதிலாக பள்ளி சிறுமிகள் விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட சிறுமிகளை இன்று ஜனாதிபதி முகமது புஹாரி அபுஜாவில் வரவேற்பார் என்று அறிக்கை ஒன்று கூறுகிறது.
சிபோக் சிறுமிகள் என்றழைக்கப்படும் பெண்களின் கடத்தல் விவகாரம் உலகளவில் கண்டனங்களை எழுப்பியது மட்டுமின்றி, பெரிய சமூக ஊடக பிரசாரத்தையும் தூண்டியது.
இந்த சமீபத்திய விடுவிப்பு சம்பவத்திற்குமுன், கடத்தப்பட்ட 276 பேரில் சுமார் 195 பேர் காணமால் போயிருந்தனர். பல சிறுமிகளை போகோ ஹராம் தீவிரவாதிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியும் கடுமையாக துன்புறுத்தியும் சீரழித்து வந்ததை, அந்த குழுவில் இருந்து இதற்கு முன்னர் தப்பிய மாணவிகள் சிலர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தனர்.
போகோ ஹராம் என சந்தேகிக்கப்பட்ட நபர்கள் எத்தனை பேர் விடுவிக்கப்பட்டனர் என்ற எண்ணிக்கை அதிகாரிகளால் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட 82 சிறுமிகளும் நைஜீரிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்றும், சிறுமிகள் தொலைத்தூர பகுதியிலிருந்து கேமரூன் உடனான எல்லையை ஒட்டி அமைந்துள்ள பாங்கி அருகே இருக்கும் ராணுவ தளத்திற்கு சாலை வழியாக வாகன தொடரணி மூலம் கொண்டு வரப்பட்டனர் என்றும் தெரிய வந்துள்ளது.