வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி சந்தேகத்தின் அடிப்படையில் அமெரிக்கர் ஒருவரை கைது செய்துள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
பியூஎஸ்டி என்றழைக்கப்படும் பியோங்யாங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த கிம் ஹாக்-சாங், கடந்த மே 6-ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டதாக கேசிஎன்ஏ செய்தி ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, பியூஎஸ்டி பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த கிம் சாங்-டக் உள்பட மூன்று அமெரிக்கர்கள் தற்போது வடகொரியாவில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
பியோங்யாங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழமானது கிறிஸ்தவர்களால் நிறுவப்பட்டு 2010 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. இங்கு பயின்று வரும் மாணவர்களில் பெரும்பகுதியினரும் வடகொரிய செல்வந்தர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளின் பிள்ளைகளாவார்.
வடகொரியாவுக்கு எதிரான கருத்துகளை பரப்பியதாக கூறி கைது செய்யப்பட்ட Otto Frederick Warmbier என்ற மாணவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது வடகொரிய சிறப்பு நீதிமன்றம்.
முன்னதாக தனது நாட்டு குடிமக்களை கைது செய்து அவர்களை வடகொரியா பிணைக்கைதிகளாக பயன்படுத்துவதாக கடந்த காலங்களில் அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.