தமிழக அரசியலில் முக்கிய தலைவரான திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் 7 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா ஜூன் 3ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது. அதே நேரம் கருணாநிதி தமிழக சட்டப்பேரவைக்கு தெரிவு செய்யப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைகிறது.
அதனால் அவருடைய 94வது பிறந்த நாள் விழாவையும், சட்டப்பேரவைக்கு தெரிவு செய்யப்பட்ட வைரவிழாவையும் ஒரு சேர விமர்சையாக நடத்த திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள 7 மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே 90 வயது வரை அரசியலில் ஈடுபட்டனர்.
அதில் முக்கியமானவர் கலைஞர் கருணாநிதி. இதுவரை போட்டியிட்ட எல்லா சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் கருணாநிதி. திமுக படுதோல்வி அடைந்தாலும் கருணாநிதி எந்த தேர்தலிலும் தோற்றது கிடையாது.
இந்திய அரசியலின் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான கருணாநிதியின் பிறந்த நாள் வருகின்ற ஜூன் மாதம் 3ஆம் திகதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
இதனால் பல்வேறு ஏற்பாடுகளை செய்துவரும் திமுக 7 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
திமுக விடுத்துள்ள அழைப்பை ஏற்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.