குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், புனே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத் மற்றும் புனே அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற புனே அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணிக்கு, மெக்கலம் (45), இஷான் கிஷான் (31) ஆகியோர் கைகொடுக்க, குஜராத் அணி, 19.5 ஓவரில் 161 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய புனே அணிக்கு, ரகானே (4), திருப்பதி (6), ஸ்மித் (4), திவாரி (0) என முன் வரிசை வீரர்கள் சொதப்பலாக வெளியேறினர். பின் இணைந்த ஸ்டோக்ஸ், டோனி ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அவ்வப்போது பவுண்டரி, சிக்சர் என விளாசிய ஸ்டோக்ஸ், அரைசதம் கடந்தார். டோனி 26 ஓட்டங்கள் எடுத்த போது அவுட்டானார். பின் கிறிஸ்டியன் துணையுடன் தொடர்ந்து அதிரடி காட்டிய ஸ்டோக்ஸ், டி-20 அரங்கில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
பின் கிறிஸ்டியன், ஒரு சிக்சர் பறக்க விட, புனே அணி 19.5 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 167 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸ்டோக்ஸ் (103 ஓட்டங்கள், 7 பவுண்டரி, 6 சிக்சர்கள்), கிறிஸ்டியன் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் அரங்கில், முதல் முறையாக குஜராத் அணியை புனே அணி வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.