சுவிட்சர்லாந்து நாட்டில் சமூக வலைத்தளம் மூலம் சந்தித்த 16 வயது சிறுமியை கற்பழித்த வாலிபர் ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுவிஸ் எல்லையில் உள்ள Feldkirch என்ற இடத்தில் 16 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இதே பகுதியில் வசித்து வருவதாக கூறப்படும் நபர் ஒருவர் சமூக வலைத்தளமான ஸ்னாப்சாட்டில் சிறுமியை சந்தித்துள்ளார்.
இருவரும் நேரில் பார்த்துக்கொள்ளாமல் சில தகவல்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 16-ம் திகதி ‘உங்கள் வீடு இருக்கும் பகுதி வழியாக செல்வதாகவும், உங்களிடம் நேரில் பேச விரும்புவதாகவும்’ வாலிபர் சிறுமியிடம் கூறியுள்ளார்.
வாலிபர் கூறியதை உண்மை என நம்பிய சிறுமி அவரிடம் வீட்டு முகவரியை அளித்துள்ளார். இதே நேரத்தில் வீட்டில் சிறுமியின் பெற்றோரும் இல்லை எனக் கூறப்படுகிறது.
முகவரியை பெற்ற வாலிபர் இரவு சுமார் 11 மணியளவில் சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இருவரும் பேசிக்கொண்டு இருந்த நேரத்தில் திடீரென வாலிபர் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியை அவரை வெளியே செல்ல எச்சரித்துள்ளார்.
ஆனால், சிறுமியின் செயலால் ஆத்திரம் அடைந்த வாலிபர் இரக்கமின்றி சிறுமியை கற்பழித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இவ்விவகாரம் குறித்து பொலிசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது தான் வெளியில் தெரியவந்துள்ளது.
பொலிசார் நடத்திய விசாரணையில் வாலிபருக்கு 18 முதல் 25 வயது இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், வாலிபரின் அடையாளங்களை வெளியிட்டுள்ள பொலிசார் சந்தேகத்திற்குரிய நபர் குறித்து அறிந்தவர்கள் உடனடியாக பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாரு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.