ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் புனே அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.
புனேயில் நடைபெற்ற போட்டியில் ரைசிங் புனே சூப்பர ஜெயன்ட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணித்தலைவர் கோஹ்லி பந்து வீச தெரிவு செய்தார்.
அதன் படி களமிறங்கிய புனே அணி, ஸ்மித், திரிபாதி மற்றும் திவாரியின் நிதான ஆட்டத்தில் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மித் 32 பந்துகளில் 1 சிக்சர், 5 பவுண்டரி விளாசி 45 ஓட்டங்கள் எடுத்தார்.
இதனையடுத்து 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி வழக்கம் போல மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்கள் எடுத்து படுதோல்வியடைந்தது.
புனே தரப்பில் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவரை 10 லீக் போட்டியில் விளையாடி உள்ள பெங்களூர் அணி 7 தோல்வி, 2 வெற்றி என 5 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.