முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இலங்கையை சுமார் 10 ஆண்டுகள் வரை ஆட்சி செய்தது. இந்த காலப்பகுதியில் அரசியல் ரீதியிலும், சமூக ரீதியிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.
குறிப்பாக 30 ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்குகொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்தும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகள் பெருவாரியாக இராணுவமயமாக்கப்பட்டிருந்தன.
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும், அரசியல் படுகொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் இன ஒடுக்கு முறைகளும் கடந்த ஆட்சிக் காலத்தில் தொடர்ந்தது. குறிப்பாக தமிழ் மக்கள் மீது அதிகார வர்க்கம் ஒடுக்குமுறை தொடர்ந்தும் கடைப்பிடித்துக் கொண்டிருந்தது.
இதன் காரணமாக 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியின் பின்னணியில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது. காரணம் அவரது வெற்றியை தீர்மானித்தது வடக்கு கிழக்கு உள்ளிட்ட மலையகப் பகுதி மக்களின் வாக்குகளே.
தமது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர்.
எனினும், அந்த நம்பிக்கை அவநம்பிக்கையாக மாற்றமடைந்து, இன்று தமிழ் மக்கள் வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் மாதக் கணக்கில் நீடித்துகொண்டிருக்கின்றது.
இந்த போராட்டத்திற்கு இது வரையில் உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில், நல்லாட்சி அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டங்களை கைவிடுமாறு அரசாங்கம் பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ள போதிலும் போராட்டங்களின் வடிவங்கள் நாளுக்கு நாள் மாற்றமடைந்து தீவிரமடைந்து செல்கின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம், காணி விடுவிப்பை வலியுறுத்திய போராட்டம், வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம், தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான போராட்டம், தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் என அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டு செல்கின்றது.
இந்நிலையில், இலங்கை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன எடுத்திருக்கும் முடிவு பலரையும் யோசிக்க வைத்துள்ளது.
முன்னாள் இராணுவ தளபதியும், இந்நாள் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகவை இராணுவ அதிகாரமுள்ள பதவி ஒன்றை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பாக நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தி ஒழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் பதவியை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த வகையில், முப்படைகளையும், பொலிஸாரையும் கொண்டு நாட்டில் ஒழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அந்த பதவியை பொறுப்பேற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளதாக அரசியல் தரப்பு உறுதி செய்துள்ளது.
இங்குதான் அரசியல் ரீதியில் ஜனாதிபதி மைத்திரியின் சதுரங் வேட்டை ஆரம்பித்துள்ளதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர். குறிப்பாக இன்று அராசங்கத்திற்கு எதிராக தமிழ் மக்களின் போராட்டங்களே தலை தூக்கியுள்ளன.
அப்படியானால் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு மைத்திரி முற்படுகின்றாரா என பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்? தமிழ் மக்களின் போராட்டம் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், போராட்டங்களை கட்டுப்படுத்த அமைச்சர் பொன்சேகாவிற்கு இராணுவ அதிகாரமுடைய அல்லது அதற்கு நிகரான பதவி ஒன்றை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளாரா?
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை வேண்டுகோளா? அல்லது வேண்டுகோள் கலந்த உத்தரவா? என பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், மைத்திரியின் சதுரங்க வேட்டையில் தமிழர்கள் சிக்கப்போகின்றார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.