ஐ.பி.எல். தொடரின் 31-வது லீக் போட்டியில் இன்று கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் – ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியும் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற குஜராத் லயன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துவக்க வீரர்கள் கெய்ல், விராட் கோஹ்லி தொடக்கம் முதலே திணறினார்கள்.
அணியின் எண்ணிக்கை 22 ஓட்டங்களாக இருக்கும்போது விராட் கோஹ்லி (10), கெய்ல் (8), டிராவிஸ் ஹெட் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினர்.
4-வது விக்கெட்டுக்கு டி வில்லியர்ஸ் உடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். இவர் 18 பந்தில் 31 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். டி வில்லியர்ஸ் 5 ஓட்டங்களில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.
மந்தீப் சிங் 8 ஓட்டங்களில் வெளியேற, நெஹி அதிரடியாக விளையாடி 19 பந்தில் 32 ஓட்டங்கள் எடுத்தார்.
இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 134 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
குஜராத் அணி சார்பில் டை 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
அடுத்து எளிய இலக்கை விரட்டுவதற்கு குஜராத் அணி சார்பில் துவக்க வீரர்களாக ஈசான் கிஷான் மற்றும் பிராண்டன் மெக்குல்லம் களமிறங்கிறனர்.
ஈசான் கிஷான்(16), மெக்குல்லம்(3) ஓட்டங்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்த பின்ச், ஆரம்பத்திலே அதிரடி காட்ட ஆரம்பித்துவிட்டார்.
என்ன எண்ணத்தில் வந்தார் என்றே தெரியவில்லை. பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். இதனால் குஜராத் அணியின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் எகிறியது.
34 பந்துகளை சந்தித்து 72 ஓட்டங்கள் குவித்த போது பின்ச் நெகி பந்து வீச்சில் டிவில்லியர்சிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதில் 6 சிக்ஸ்ர், 5 பவுண்டரிகள் அடங்கும்.
இறுதியாக குஜராத் அணி 13.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இதுவரை 9 போட்டிகள் ஆடியுள்ள பெங்களூரு அணி 6 தோல்வி,2 வெற்றி, 1 ஆட்டம் ரத்து என மொத்தம் 5 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வி என 6 புள்ளிகளுடன், 6-வது இடத்தில் உள்ளது.
பெங்களூரு அணி கடந்த இரண்டு போட்டிகளில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றுகளிலும் சொதப்பி வருகிறது. இன்றைய போட்டியில் கூட பெங்களூ அணி வீரர்கள் பீல்டிங்கில் சொதப்பினர்.