முகாம்கள் மாற்றப்பட்டுள்ள போதும் வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள், அடுத்தது என்ன..? எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் இடம்பெற்ற கருத்துப் பகிர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
2015 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு புதிய அரசாங்கத்தின் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதிர்க்கட்சி பதவியை ஏற்றுக்கொண்டதன் பிற்பாடும் இந்த அரசாங்கத்தால் பல்வேறு விடயங்களை நிறைவேற்றலாம் என எமது தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் வாக்குறுதிகள் எவ்வளவு தூரம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிறைவேற்றப்படவில்லையாயின் அதற்கான காரணங்கள் என்ன என்ற அடிப்படையில் இருந்து கடந்த காலத்தை பார்க்கின்ற போது நாம் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி எழுகின்றது.
யுத்தத்திற்கு பிற்பாடு அரசாங்கதால் ஏற்படுத்தப்பட்ட சில பிரச்சினைகள் இருந்தது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் 15 டிவிசன் இராணுவத்தினர் இருந்தனர். அதில் 150000 இராணுவம் இருந்தது.
என்னைப் பொருத்தவரையில் அதேயளவு இராணுவம் இன்னும் இருக்கின்றது. முகாம்கள் மாற்றப்பட்டிருக்கலாம் ஆனால் 5 மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு 3 டிவிசன் என்ற வகையில் இன்னும் இருக்கின்றது.
இதற்கு அப்பால் கடற்படை, விமானப்படை, விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்பு படை, பொலிஸ் என்பனவும் உள்ளது. வடக்கு மாகாணத்தில் இறுதியாக எடுத்த தரவுகளின் அடிப்படையில் பத்து இலட்சம் மக்கள் வாழ்கின்றார்கள்.
இதனடிப்படையில் பார்க்கின்ற போது மூன்று நான்கு தமிழர்களுக்கு ஒரு இராணுவம் என்ற வகையில் உள்ளதால் எந்தளவு தூரம் நாம் இராணுவ அடக்கு முறைக்குள் இருக்கின்றோம். சிலர் கூறுக்கின்றனர் இராணுவத்தினரை வீதியில் பார்க்க முடியவில்லை.
செத்த வீடுகளில் பார்க்க முடியவில்லை. ஆனால் எந்த சிறிய கூட்டத்தினை நடத்தினாலும் அனைத்து புலனாய்வு பிரிவுகளும் உள்ளதாகவே நிகழ்வை நடத்தவேண்டியுள்ளது. இவை யுத்தத்திற்கு பின்னர் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகள்.
மக்கள் மீளக்குடியேற வேண்டும். அதற்கு நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும். அதற்கு இராணுவம் வெளியேற வேண்டும். எனவே வடக்கில் உள்ள இராணுவத்தினரை 9 மாகாணங்களுக்கும் பிரிக்கவேண்டும்.
அவ்வாறு செய்தால் வடக்கில் மக்களை குடியற்றுவதற்கான நிலங்கள் வெளிப்படும். எனினும் அவ்வாறு செய்யாமல் தொடர்ச்சியாக வடக்கு கிழக்கை இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பதே நடைபெறுகின்றது.
இந்த நிலையில் சம்பந்தன், மைத்திரி ஒரு இனவாதி அல்ல அவர்களை நாம் நம்புகின்றோம் என்கின்றார். ரணில் விக்கிரமசிங்கவை நம்புகின்றோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்தவேண்டும்.
எழுக தமிழ் நிகழ்வை நடாத்தவேண்டாம். அமைதியாக இருங்கள் நீங்கள் நடத்தும் போராட்டங்கள் குழப்பங்களை உருவாக்கும் என்று பேசி வந்ததெல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில்.
சுமந்திரன் ஏன் பொய்யான தகவல்களை செல்லவேண்டும். எந்த வித எழுத்து மூல நிபந்தனையும் இன்றி கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவளித்தது.
ஆனால் இன்று சுமந்திரன் சொல்கின்றார் காணிகளை விடுவிப்போம் மைத்திரிபால சிறிசேன எழுத்து மூலம் உத்தரவாதம் தந்துள்ளதாக பொய் கூறுகின்றார்.
அவ்வாறு தந்திருந்தால் அந்த ஆவணத்தினை காட்டவேண்டும். ஆனால் அவ்வாறு எந்த விடயமும் நடைபெறவில்லை என்பதே உண்மை. இதனைப் பார்க்கின்ற போது இவர்கள் தற்போது தமிழ் மக்களிடம் பொய்களை கூறத்தொடங்கியுள்ளனர்.
நாங்கள் அபிவிருத்தி தொடர்பான பக்கமாக இருக்கலாம். இராணுவமயமாக்கலில் இருந்து விடுவிக்கப்படும் விடயங்களாக இருக்கலாம் அல்லது அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் விடயங்களாக இருக்கலாம் நாங்கள் அனைத்திலும் தோல்வியடைந்தவர்களாக இருக்கின்றோம்.
ஆகவே அடுத்தது என்ன என்பது தொடர்பில் சிந்திக்கவேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். தற்போது இருக்ககூடிய தலைமை தவறான பாதையில் செல்வதாக இருந்தால் மாற்றுத்தலைமை என்பது தேவை. அந்த தலைமை தற்போதுள்ள தலைமை விட்ட தவறுகளை மீண்டும் விடுவதற்காக அல்ல.
மேலும், புதிய யுக்திகளை, புதிய தந்திரோபாயங்களை வகுத்து எவ்வாறு தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னெடுத்து சென்று வெற்றிபெறலாம் என்ற அடிப்படையில் உருவாக்கப்படவேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.