எதிர்வரும் மே தினத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் அமைச்சரவை மாற்றத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சிலருக்கு பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி செயலக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டு எதிர்க்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைய இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நாட்டில் மாறி வரும் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சாராத பிற கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருவதாகவும் இவர்கள் ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் இதனால், கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.