சசிகலா மற்றும் ஓபிஎஸ் பிரிவுக்கு பிறகு இரு அணிகளாய் பிரிந்த அதிமுக, மீண்டும் இணையும் சூழல் உருவாகியுள்ளதாக பரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் முழு அதிகாரத்தை செலுத்த முயன்றார் சசிகலா.
இதன் விளைவாக பன்னீர் செல்வத்தின் முதலமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால் அதிமுக இரண்டாக உடைந்து மூத்த உறுப்பினர்கள் பலரும் ஓபிஎஸ் பக்கம் நகர, பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் சசிகலா தரப்பினரிடம் சென்றனர்.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கூட இரு அணிகளும் தனித்தனியாய் பிரிந்து நின்றன. அதன் பின் முறைகேடான பணப்பட்டுவாடா மற்றும் பல்வேறு வன்முறைகள் காரணமாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் கழகத்தின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைவதாக அதிமுகவினர் உணர்ந்துள்ளனர்.
இதையடுத்து, சசிகலா குடும்பத்தாரை ஓரம்கட்டிவிட்டு பழைய அதிமுகவாகவே திரும்பி வர அதிமுக தொண்டர்கள் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அதிமுக அம்மா அணி தரப்பில் முக்கிய அமைச்சர்கள், ஓபிஎஸ் அணியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், தினகரன் துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகலாம் என கூறப்படுகிறது.
தினகரனுக்கு ஆதரவாக சிலர் குரல் எழுப்பினாலும், கொங்கு பகுதியின் எண்ணங்கள் அவருக்கு எதிராகவே இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருக்கும்பட்சத்தில், ஓபிஎஸ் கழக பொதுச்செயலாளராக நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.