கனடாவில் மேலும் ஒரு இளைய உயிர் இழக்கப்பட்டுள்ளது. தொடரும் பெரும் துயரமாகியுள்ளது தொடரும் இவ்மரணங்கள். வயதுவேறுபாடின்றி மனநலப்பாதிப்பு இறப்புகளுக்கு காரணமாவது தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இம்மரணங்கள் சம்பவிக்கும் போது மட்டும் பேசப்படும் விடமாகவும் அது குறித்த கரிசனை பின்னர் மங்கிப் போவதும் இது குறித்த சமூக அக்கறை அற்றிருப்பதும் பெரும் துயர் தருகிறது.
மனநலப்பாதிப்பு இன்று புலம்பெயர் தமிழர் வாழ்விலும் பெரும் பங்கை வகிக்கிறது. இப்பாதிப்பு எங்கள் ஒவ்வொர்வரிலும் ஒருவகை தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. மன அழுத்தம் என்றால் என்ன? அதன் குணாம்சங்கள் அறிகுறிகள் என்ன? அதை எதிர்கொள்வது எப்படி? அதில் பாதிப்புற்றிருக்கும் ஒருவருக்கு எவ்வாறு உறுதுணையாக இருப்பது போன்ற எவ்வித அறிவும் அது குறித்த தேடலும் அற்றே நாம் தொடர்ந்தும் இருக்கின்றோம்.
இன்று ஒவ்வொரு வீட்டிலும் மனநல பாதிப்பால் பாதிப்புற்றுள்ள ஒரு வெடிகுண்டு எப்போது வெடிக்கும் என்று தெரியாத நிலையில் இருக்கிறது என்பதே யதார்த்த நிலை. இச்சூழக்கு பல காரணங்கள் உண்டு. பரஸ்பர புரிந்துணர்வுக்கு நேரமில்லாத இயந்திர வாழ்க்கை. எமக்காக வாழாமால் எனையவர்களுக்காக வாழ்வதால் நாமே எம்மைச் சுற்றி எழுப்பும் அழுத்தங்கள்.. அதாவது மற்றவர்களிலும் பார்க்க எனது வீடு பெரிதாக இருக்கவேண்டும் எனது வாகனம் சிறப்பாக இருக்கவேண்டும் எனது பிள்ளை முன்னுக்கு வரவேண்டும்…. சுருங்கக்கூறின் பல நேரங்களில் விரலுக்கு மிஞ்சிய வீக்கமாகவே அமையும் எதிர்பார்ப்புக்களும் அதனால் அமையும் தாக்கங்களும்.
இவை மட்டுமல்ல.. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே நிலவும் பாரிய இடைவெளியும் ஒரு பெரும் சவால் நிலையாகியுள்ளது. நாங்கள் வளர்ந்தகாலத்தில் எதிர்கொள்ளாத பாரிய சவால்களை இன்றைய பிள்ளைகள் எதிர்கொள்கின்றன என்பதை பல பெற்றார் உணர்ந்து கொள்ள தவறிவிடுகின்றனர். பெற்றோருடன் எவ்வளவு நற்பாக இருந்தாலும் தமது பிரச்சனைகளுக்கு தங்கள் பெற்றாரிடம்; தீர்வுகள் இல்லை என்றே பல பிள்ளைகள் நம்புகின்றார்கள்…
இதையும் கடந்து நாம் வந்த காலத்தில் நிறைய கஸ்டப்பட்டு விட்டோம் . எமது பிள்ளைகள் கஸ்டப்படக்கூடாது என பிள்ளைகளுக்கு எவ்வித கஸ்டமும் தெரியாது பெற்றார் பொத்திப் பொத்தி வளர்ப்பதால் தமது வாழ்க்கையில் பிரச்சனைகள் தோல்விகள் ஏற்படும் போது அதை எதிர்கொள்ளும் பக்குவமும் மனோதிடமும் அற்றவர்களாகவுமுள்ளனர். இவற்றினால் இளையவர்கள் எதிர்கொள்ளும் மனநல பாதிப்புக்களே தற்கொலை என்ற கடினமான முடிவுக்கு அவர்களை இட்டுச்செல்கிறது.இவ்வாறு அவர்கள் பாதிப்பை எதிர்கொள்ளும் போது அதை கவனிக்க பெற்றோர் தவறுவது மட்டுமன்றி நண்பர்கள் உற்றார் உறவினர் அயலவர் என பலரும் தவறிவிடுகின்றனர். பற்றற்றநிலை அமைதியின்மை நித்திரையின்மை உணவுத்தவிர்ப்பு தீடிரென எடை குறைதல் அல்லது கூடுதல் மனநிலையில் தடுமாற்றம் என பல அறிகுறிகள் வெளிப்படும். இது குறித்த வெளிப்படையான கலந்துரையாடல்கள் அமைவதும் அதில் தயக்கமின்றி அனைவரும் கலந்து கொள்வதும் இதற்கான பரிகாரங்களாக அமையமுடியும்.
மனநல பாதிப்பு முன்கூட்டியே கண்டறியப்படுமேயானால் மிகவும் இலகுவாக தீர்வு காணக்கூடிய விடயம். எனவே இதனையும் சமூகத்தின் முதன்மை விடயமாகக்கொண்டு தமிழர் அமைப்புக்கள் ஊடகங்கள் ஏன் துறைசார் வைத்தியர்கள் அனைவரும் மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்படாதவகையில் செயற்படுவீர்கள் என நம்புகிறேன். இது குறித்து தொடர்ந்தும் ஊடகங்கள் வாயிலாக பேசியும் எழுதியும் வருகின்றேன். என்னால் முடிந்த உதவிகளுக்கு தயங்காது நாடவும்;…
ஆரோக்கியமான சமுதாயமே என்றும் ஒரு அரோக்கியமான நாட்டின் அத்திவாரம்