தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் அரசாங்கத்தை மக்கள் வெறுக்கும் சூழ்நிலை உருவாகும். இதனை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்ன அடம்பன் இரசபுரத்தில் 150 வீடுகளை பயனாளிகளிடத்தில் கையளிக்கும் நிகழ்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து அவர்,
ஞானம் அறக்கட்டளை நிறுவனமானது இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த 150 குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கின்றார்கள்.
நாட்டிலுள்ள தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட்டு ஒரு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அந்த அரசியல் சாசனத்தினூடாக நாங்களும் சமமாக, ஒற்றுமையாக, சுயமரியாதையுடன் வாழ வேண்டுமென்று இந்த நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு கோரிக்கையை முன்வைத்து வருகிறோம்.
கடந்த 80 வருடங்களாக மக்கள் ஜனநாயக ரீதியாக தேர்தல்களின் மூலமாக அம்முடிவைத் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அம்முடிவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
அந்த கோரிக்கையை தொடர்ந்து எமது மக்கள் முன்வைத்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதனுடன் வேறு பல கோரிக்கைகளையும் முன்வைத்து போராடுகிறார்கள்.
குறிப்பாக காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகள், காணிகள் சம்பந்தமான பிரச்சினைகள், மக்களின் மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் சம்பந்தமான பிரச்சினைகள், புனர்வாழ்வு, தொழில் வாய்ப்பு போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்.
அத்துடன் இப்பிரச்சினைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட வேண்டிய தேவையிருக்கின்றது.
புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தமிழ் மக்கள் ஒரு பெரும் பங்களிப்பை செய்தார்கள். தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் பங்களிப்பும் பாரியதாக இருந்தது.
ஆனால் அரசாங்கத்தின் போக்கானது அவர்களுடைய கொள்கைகளைப் பொறுத்த வரையில், அவர்களுடைய பேச்சைப்பொறுத்த வரையில் பழைய அரசாங்கத்திற்கும் புதிய அரசாங்கத்திற்குமிடையில் ஒரு மாற்றத்தை காண்கிறோம்.
இருந்தாலும் எமது மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும், காணாமல் போனோர் சம்பந்தமாக ஒரு முடிவு விரைவில் கிடைக்கவேண்டும், அரசாங்கம் துரிதமாக செயற்படவேண்டும் என்பது அத்தியவசியமாக இருக்கிறது.
அது அவர்களின் கடமை. அரசாங்கம் பதவி ஏற்று இரண்டு வருடகாலமாகி விட்டது. மக்களுடைய காணிகள் மக்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்.
இராணுவம் மக்களுடைய காணியில் விவசாயம் செய்து அதில் வியாபாரம் செய்து தொழில்செய்து உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
எமது மக்கள் நலன்புரி நிலையங்களிலும், முகாம்களிலும், இன்னொருவர் வீடுகளிலும், அவர்களின் தயவில் தங்கி வாழ முடியாது தவிர்க்கின்றார்கள்.
எமது மக்கள் தங்களுடைய காணிகளுக்கு திரும்ப வேண்டும். ஓரளவுதான் அரசு மக்களின் காணிகளை விடுவித்திருக்கிறது. மன்னாரில், வவுனியாவில், கிளிநொச்சியில், திருகோணமலையில், மட்டக்களப்பில், அம்பாறையில் கூட காணிகள் விடப்பட வேண்டியிருக்கிறது. ஆனபடியால் இனியும் தாமதிக்காமல் அரசாங்கம் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும்.
அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டால் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என சொல்லப்படுகின்றது. அச்சட்டமும் நீக்கப்டவில்லை. அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இந் நிலைமை தொடர முடியாது.
புதிய அரசாங்கம் இரண்டு வருடமாக ஆட்சியில் இருக்கின்றது. எமது மக்கள் இன்னும் பொறுமையாக இருக்க முடியாது.
நீதியை கேட்டு காணாமல் போனோர் சம்பந்தமாக முடிவைக் கேட்டு காணிகள் மற்றும் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் என கேட்டும் போராடுகிறார்கள்.
ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலைவாய்ப்புக் கோரி போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் எமது இளைஞர்களுக்கு போதிய அளவிற்கு வேலைவாய்ப்பு இருக்கவில்லை. இப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
மேலும், இவ்விதமான புறக்கணிப்பு தொடர முடியாது. இந்நிலமை தொடருமாக விருந்தால் இவ் அரசாங்கத்தை மக்கள் வெறுக்க வேண்டிய நிலமை ஏற்படும்.
இதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.