பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார்.
அதனையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதிக்கு வருகிற 12-ம் திகதியன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பிளவு கண்ட அதிமுக-வின் இரு அணிகள், எதிர்க்கட்சியான திமுக, ஜெயலலிதாவின் சகோதரர் மகள், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் என சுமார் 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அதேபோல், பல முனைப் போட்டிகள் நிலவி வரும் தேர்தல் என்பதால், பணப்பட்டுவாடாக்களும் குறைவின்றி நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு அரசியல் கட்சிகளும் முறையிட்டு புகார் மனுக்கள் அளித்துள்ளன. மேலும், இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டன.
இதனிடையே, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரது வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையின் சோதனையில், ஏராளமான ஆவணங்கள் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது வெளியாகியுள்ள அந்த ஆவணங்களில் பணப்பட்டுவாடா குறித்த பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களும் அதில் அடங்கும்.
ஆர்கே நகர் இடை தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்து வருமானவரித்துறை சார்பில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது இடைத்தேர்தல் குறித்து கூடுதல் ஆவணங்களை அவர் சமர்ப்பித்தார்.
இந்நிலையில், ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
வாக்குக்கு பணம் அளித்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாக தெரிகிறது.