தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழாவையொட்டி 100 மூத்த சினிமா கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் வீதம் தங்க நாணயத்தை பரிசாக நடிகர் விஜய்சேதுபதி வழங்கவுள்ளார்.
இது குறித்து உலகாயுதா ஃபவுண்டேஷன் தலைவரும், இயக்குநருமான எஸ்.பி.ஜனநாதன் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: திரைப்படக்கலை என்பது பல கலைகள் சங்கமிக்கும் நவீன கலை. இந்தத் திரைப்படக் கலையை தாதா சாஹேப் பால்கே தனது ராஜா ஹரிச்சந்திரா படத்தின் மூலம் 1931-ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்.
இந்தத் திரைப்படக் கலையை தென்னிந்தியாவுக்கே அறிமுகம் செய்து வைத்தவர் ஆர். நடராஜ முதலியார் என்ற தமிழர். அவர் தயாரித்து, இயக்கிய கீசக வதம் என்ற முதல் முழு நீள சலனப்படம், 1916-ஆம் ஆண்டில் வெளியானது. கடந்த ஆண்டுடன் முதல் சலனப்படம் எடுக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
தென்னிந்தியாவின் முதல் தமிழ் தேசிய சலனப்படமான கீசக வதத்தில் தொடங்கி 100 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகம் சந்தித்த சோதனைகளும், வென்றெடுத்த சாதனைகளும் ஏராளம். இக்கலையை வளர்ப்பதற்காக தங்கள் வாழ்வையே பணயம் வைத்து உழைத்த ஒவ்வொரு கலைஞரையும் கௌரவப்படுத்த உலகாயுதா அமைப்பு விரும்புகிறது. இதற்காக திரைப்படத்துறையிலுள்ள ஒவ்வொரு பிரிவிலிருந்தும் மூன்று மூத்த கலைஞர்களைத் தேர்வு செய்து, மொத்தம் 100 கலைஞர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு சவரன் என தங்கப்பதக்கம் பரிசளிக்க தீர்மானித்துள்ளோம்.
வரும் மே மாதம் 1-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், தமிழ் சினிமாவின் முன்னோடிகள் கலந்து கொண்டு இந்த பரிசை கலைஞர்களுக்கு வழங்கவுள்ளனர்.
மேலும் விழாவில் தமிழ் சினிமாவுக்காக முதல் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கிய நிமாய்கோஷ், எம்.பி.சீனிவாஸ் ஆகியோரது உருவப்படங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன. நூறு சவரன் தங்கப்பதக்கங்களுக்கான செலவுத் தொகையை நடிகர் விஜய்சேதுபதி ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு எங்களது அமைப்பின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் எஸ்.பி.ஜனநாதன்.