திறந்த பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது. இலங்கையை விட பின்தங்கி இருந்த நாடுகள் கூட முன்னேறிவிட்டன. இனி வேறு எந்த நாடு எம்மை பின்தள்ளப் போகின்றது என்ற அச்சத்திலேயே தாம் இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்துவது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் ஜப்பான், சிங்கப்பூர், கொரியாவுக்கு அடுத்ததாக நாமே புதிய பொருளாதார முறையை அறிமுகப்படுத்தியிருந்தோம்.
ஆனால் தற்போது பின்தங்கிய நாடுகள் கூட எம்மை பின்தள்ளி விட்டு முன்னேறி விட்டன. இனி எந்த நாடு எம்மை முந்தி செல்லப்போகின்றது எனற அச்சத்திலேயே நான் இருக்கின்றேன்.
பத்திரிகைகளுக்கு நேர்காணல் கொடுப்பதால் மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. நாம் பயணிக்க வேண்டிய முறையான திட்டத்துடனான பாதையை நல்லாட்சி தீர்மானித்து விட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
தற்போது வரை 3600 கோடி ரூபா கடன் செலுத்த வேண்டி உள்ளது. இதை செலுத்தி முடிக்க 2026 – 2038 வரையான காலப்பகுதி தேவைப்படுகின்றது.
இதனால் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.