துபாயிலிருந்து எமரேட் ஏர்லைன்ஸ் விமானம் 262 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து கொண்டிருந்தது. அதில் சென்னையை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் 2 ஆண்டுகள் துபாயில் பணிபுரிந்துவிட்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார்.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 45 வயது பெண் சுற்றுலா பயணியும் அதே விமானத்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது சென்னை வாலிபரிடம் ஸ்பெயின் பெண் பயணி கழிவறை எங்கே இருக்கிறது கேட்டுள்ளார்.
அப்போது, சென்னை வாலிபர் கழிவறை இருந்த திசையை சுட்டிக் காட்டியபோது, அவரது கை ஸ்பெயின் பெண் பயணி மீது தவறுதலாக பட்டுவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பயணி கூச்சல் போட்டுள்ளார்.
சத்தம் கேட்டு வந்த விமான பணிப்பெண்களிடம், சென்னை வாலிபர், கழிவறையை சுட்டிக்காட்டியபோது தவறுதலாக கை பட்டுவிட்டது, என்று கூறியுள்ளார். ஆனால், ஸ்பெயின் பயணியோ வேண்டுமென்றே தன்னை சில்மிஷம் செய்ததாக தொடர்ந்து கூச்சல் போட்டார்.
இதையடுத்து, ‘விமானம் சென்னையில் இறங்கியதும் நாங்கள் இந்த வாலிபரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்து விடுகிறோம். நீங்கள் அவர்களிடம் புகார் கொடுங்கள். அதுவரை அமைதியாக இருங்கள்’ என்று கூறியுள்ளனர்.
நேற்று அதிகாலை 2.45 மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்தில் இறங்கியது. சுங்க அதிகாரிகளின் சோதனை முடிந்ததும், அந்த வாலிபரை விமான நிலைய போலீசாரிடம் விமானிகள் ஒப்படைத்தனர். ஆனால், காலை 10 மணி வரை சம்பந்தப்பட்ட ஸ்பெயின் பெண் பயணி புகார் கொடுக்க வரவில்லை.
இதையடுத்து எமரேட் விமான நிறுவனத்துக்கு தொடர்பு கொண்ட போலீசார், ‘‘யாரும் புகார் கொடுக்க வில்லை என்றால் அந்த வாலிபரை அனுப்பி விடுகிறோம்’என்றனர். அதற்கு எமரேட் விமான நிறுவனமும் அனுப்பி விடுங்கள் என்று கூறியுள்ளது. இதையடுத்து அந்த வாலிபரை விமான நிலைய போலீசார் அனுப்பி வைத்தனர்.