பிரித்தானிய அரசியல் தற்போது ஒரு பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பிலான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பில் கடந்த ஆண்டு மக்கள் வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில், 52 வீதமான மக்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இதனையடுத்து பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் தனது பதவியை இராஜினாமா செய்தார். தொடர்ந்தும் பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேசா மே பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் பிரித்தானியா தனது கடிதத்தை முறையாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் கடந்த 29ஆம் திகதி கையளித்துள்ளது.
இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், பிரித்தானியாவிற்கும் இடையில் 44 ஆண்டு காலமாக நீடித்த உறவு முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ள நிலையில், அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறு இருக்கும் என்பதே தற்போதைய கேள்வி.
அந்த வகையில், சட்டப்பிரிவு 50ஐ அமுல்படுத்த முடிவு செய்த நாள் முதல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானியாவுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் மட்டுமே கிடைக்கும்.
இந்த வழிமுறைகளானது மிகவும் சிக்கலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக 27 நாடுகளின் தலைவர்களை கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தை வழிமுறைகளுக்கான ஒப்புதலை வழங்கும்.
இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் சார்பாக பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தைகளை ஐரோப்பிய ஆணையம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 43 ஆண்டுகளில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் எதனை நீக்குவது என்பது தொடர்பில் அவர்கள் ஆராய்வார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் வர்த்தகம் தொடர்பிலான விடயங்கள் மிகவும் சிக்கலானது எனவும், வர்த்தகம் தொடர்பிலான உடன்படிக்கைக்கு ஐரோப்பா முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் பிராந்திய நாடாளுமன்றங்களின் ஒப்புதல் தேவை.
இதில் சில நாடுகள் தனது மக்களின் கருத்துக்களை தெரிந்துகொள்ளும் வகையில் வாக்கெடுப்புகளையும் நடத்தக்கூடும். முதல் கட்ட வரைவு எட்டப்பட்டவுடன், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அது திருப்பி அனுப்பப்படும்.
குறித்த ஒப்பந்தம் அங்கு நிறைவேற்றப்பட குறைந்தது 20 நாடுகளின் ஒப்புதல் அவசியமானது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகையில் குறைந்தது 65 வீதத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடுகளின் ஒப்புதல் மிகவும் அவசியமானது.
இதனையடுத்து, ஐரோப்பிய நாடாளுமன்றின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அதில் நிறைவேற அருதிப்பெரும்பான்மை இருந்தால் போதுமானது.
இந்நிலையில், குறித்த காலப்பகுதியில் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை என்றால் என்ன நடக்க கூடும் என்பதும் தொடர்பிலும் இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று.
பேச்சுவார்த்தைகள் நீடிக்கப்படலாம். ஆனால் அதற்கு 27 நாடுகளில் ஒப்புதலும் தேவை. இல்லாது போனால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கைகள் இரத்து செய்யப்படும்.
அத்துடன், எந்த ஒரு உடன்படிக்கையும் இன்றி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.