ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்படுமா, இல்லையா என்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதியின் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி வரிச்சலுகை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு மீள வழங்குவது குறித்த அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் ஐரோப்பிய ஆணைக்குழுவால் ஐரோப்பிய நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை இலங்கை அரசு மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் 27 நிபந்தனைகளில் அரசு முன்னேற்றம் காண வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால் டஸ்கி தெரிவித்திருந்தார். குறித்த உடன்படிக்கையிலும் இலங்கை கைச்சாத்திட்டிருந்தது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நிபந்தனைகளில் முன்னேற்றம் காண இலங்கை அரசுக்கு 6 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி அடுத்த மே மாதத்துடன் 6 மாதங்கள் ஆகவுள்ள நிலையிலேயே மேற்படி அறிவிப்பு வந்துள்ளது.
இந்த விடயம் குறித்து இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் சூன் லெய் மார்க் கூறியுள்ளதாவது,
“இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பில் அடுத்த மே மாதம் 15ஆம் திகதியின் பின்னர் அறிவிக்கப்படும். அதுவரை ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்குவது குறித்து கருத்துக்கூற முடியும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் எதிர்க்கும் பட்சத்தில் இலங்கைக்கு குறித்த வரிச்சலுகை கிடைக்காது. எனவே, அரசு மேற்கொண்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகளின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கை தொடர்பில் தீர்மானிக்கும்.
எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிவரை எந்தவொரு நாடும் எதிர்ப்புத் தெரிவிக்காவிடின் இலங்கைக்கு பூரணமாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 7300 பொருட்களை ஐரோப்பிய நாடுகளின் சந்தையில் வரியின்றி ஏற்றுமதி செய்யும் முகமாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளது. மஹிந்த அரசின் காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகள் மீறப்பட்டதால் மேற்படி வரி இல்லாமல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.